கோவையில் பொன்னியின் செல்வன் திரைப்பட இரண்டாம் பாகத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பல்வேறு நடிகர் நடிகைகள் நடிப்பில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் வருகின்ற 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோஜோன்(Prozone) தனியார் மாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி மற்றும் நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு மேடையில் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகை புரிந்து நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
இந்நிகழ்வில் மேடையில் பேசிய நடிகை திரிஷா, நான் கோவைக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது, நீண்ட நாட்கள் கழித்து தற்போது கோவைக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். இதனிடையே திரிஷாவிடம் பல்வேறு ரசிகர்கள் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் அப்டேட் குறித்து கேட்க லியோ வியோ என முழக்கமிட்டனர். ஆனால் திரிஷா அதனை பற்றி அவர் கூறாமல், நான் தற்போது லியோ பட சூட்டிங்கில் இருந்து தான் வருகிறேன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் உங்கள் தளபதி நல்ல இருக்காங்க என்று கூறி மற்றவற்றை லியோ நிகழ்ச்சியில் பேசிக் கொள்ளலாம் என பதிலளித்தார்.

ட்விட்டரில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகள் சிலவற்றை அவரிடம் கேட்டனர். இதில் திரிஷாவிடம் குந்தவைக்கு சுயம்வரம் எப்போது சுயம்வரத்திற்கு நாங்கள் வரலாமா என கேள்வி கேட்கப்பட்டது அதற்கு என் உயிர் அவர்களுடையது என ரசிகர்களை கை காண்பித்தார். பிறகு அருண்மொழி வர்மன், வந்தியதேவன், ஆதித்த கரிகாலனை 1,2,3 என மனத்தில் உள்ளதை போல் வரிசைப்படுத்த வேண்டும் என கூறப்பட்டதற்கு பொன்னியின் செல்வன் 2 புரோமோஷன் என்பதால், என் இதயத்தில் இருப்பது இப்போதைக்கு வி.டி(வந்தியதேவன்) தான் என பதிலளித்தார். பிறகு பேசிய அவர் கோவையில் மூன்று விஷயங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் ஒன்று கோவை மக்கள் பேசும் தமிழ், இரண்டாவது உங்களுடைய சாப்பாடு, மூன்றாவது கோவையில் எப்போதுமே அமைதி உள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil