நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாகவும், அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் மோடியின் நல்லாட்சி,மாநிலத்தில் விஜயின் மக்களாட்சி என்று ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பலரும் தற்போது இருந்தே தங்களது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். இதில் எந்த கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது வெளியேறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாஜகவின் அடுத்த நிலை என்ன என்பது குறித்த கேள்வி எழுந்துள்ள நிலையில், பாஜக தலைமையில் தமிழக்தில் அடுத்த கூட்டணி உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களாக அரசியலில் என்ட்ரி ஆவதற்காக நடிகர் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், தனித்து போட்டியிடுவரா? அல்லது கூட்டணி சேருவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட பாதயாத்திரையில் பங்கேற்ற விஜய் ரசிகர்கள் தங்களது ஆதரவையும் அளித்தனர். இதனால் விஜய் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்ப்படுகிறது. ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எதுவும் சாத்தியமில்லை என்று கூறப்படும் நிலையில், மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த போஸ்டரில், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது என்றும், மத்தியில் மோடியின் நல்லாட்சி மாநிலத்தில் விஜயின் மக்கள் ஆட்சி என்று மக்கள் பேச்சு. தொலைபேசியில் பாரத பிரதமர் விஜய்க்கு வாழ்த்து, பதவியேற்பு விழாவிற்கு மோடி தமிழகம் வருகிறார், தமிழகத்திற்கு நல்லகாலம் பிறந்தது என்று பொதுமக்கள் பேட்டி, கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்தார் விஜய்.
தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டம் என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, ஒ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் ஆகியோர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பது போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.