பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள துணிவு படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாவிட்ட நிலையில், வாரிசு படத்தின் டிரெய்லர் எப்போது வெளியீடு என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் குஷ்பு, சரத்குமார், யோகிபாபு, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவும் நடந்தது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் வாரிசு படத்தின் அப்டேட்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே பொங்கல் தினத்தை முன்னிட்டு வாரிசு படம் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளது.
இதே தினத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படமும் வெளியாகியுள்ளது. இதனால் இரு தரப்பு ரசிகர்களும் ப்ரமோஷன் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், ஜனவரி 12 திருவிழா என்பது போல காத்திருக்கின்றனர். இதனிடையே துணிவு படத்தின் டிரெய்லர் கடந்த டிசம்பர் 31-ந் தேதி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பீஸ்ட் படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாக அஜித் ரசிகர்கள் கொண்டடி வருகின்றனர்.
துணிவு டிரெய்லர் வெளியாகி விட்டது ஆனால் வாரிசு டிரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், இந்த டிரெய்லர் ஜனவரி 2-ந் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அன்று வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது டிரெய்லர் வெளியிடும் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி நாளை (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil