தளபதி விஜயின் ஆல் டைம் பிளாக்பஸ்டர் திரைப்படமான கில்லி கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது
இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் காரணமாக தமிழ் சினிமாவில் இந்த ஏப்ரல் மாதம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பழைய பிளாக்பஸ்டர்களை மீண்டும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2004-ம் ஆண்டு தரணி இயக்கிய விஜய்யின் கில்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், புதுப்படம் ஒன்றுக்கு கிடைக்கும் வரவேற்பை போல் ரசிகர்கள் கில்லி படத்தை கொண்டாடி வருகின்றனர். இதனால் படத்தின் வசூல் அதிகரித்து வரும் நிலையில், படம் வெளியீட்டுக்கு முன்பாகவே உலகளாவிய முன்பதிவில் சுமார் ₹3 கோடி வசூலித்துள்ளது. தொடர்ந்து தியேட்டர்களில் ரசிகர்கள் நடனமாடும் வீடியோக்களால் சமூக ஊடகங்களில் வெளியாகி ஆராவாரம் செய்து வருகிறது.
இதனிடையே கில்லி படம் தற்போதுவரை ரூ10 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த தமிழ்நாட்டின் முதல் படம் என்ற சாதனை படைத்துள்ள கில்லி, இந்திய அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் முக்கிய படமாக கருதப்படும் ஷோலே படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அமிதாப் பச்சன் ஹேமா மாலினி தர்மேந்திரா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இந்திய சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படங்களில் ஒன்றாக இருக்கும் ஷோலே அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் உள்ள நிலையில், ரீ-ரிலீஸிலும் ரூ10 கோடி வசூல் செய்து இந்திய சினிமாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. தற்போது கில்லி படமும் ரீ-ரிலீஸில் ரூ10 கோடி வசூலித்து 2-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், வரும் நாட்களில் கில்லி ஷோலே படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“