விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வியாபாரத்தில் லியோ படம் பெரிய சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் இந்த படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் 2-வது முறையாக விஜயுடன் இணைந்துள்ளார். த்ரிஷா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
லலித் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் 19-ந்தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 22-ந் தேதி லியோபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜய் பெரிய கேங்ஸ்டராக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 'லியோ' படம் தமிழில் வரவிருக்கும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும், பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக படத்திற்கான வியாபாரத்தை அதிகமாகியுள்ள நிலையில், தற்போது படத்தில் வெளிநாடு மற்றும் கேரளாவில் ரிலீஸ்க்கு முந்தைய வியாபாரத்தில் லியோ படம் சாதனை படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 'லியோ' படத்தின் வெளிநாட்டு மற்றும் கேரளா திரையரங்க விநியோக உரிமைகள் விற்கப்பட்டுள்ளதாகவும், இதில் வெளிநாடு உரிமங்கள் ரூ.60 கோடி மற்றும் கேரளா உரிமம் ரூ.16 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்தின் '2.0' படத்தின் ப்ரீ-ரிலீஸ் வியாபாரத்தை 'லியோ' முறியடித்து கேரளாவில் அதிக விற்பனையான முதல் தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
வெளிநாட்டு உரிமம் விற்பனையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, தென்னிந்தியாவின் பெரிய வெற்றிப்படங்களான ஆர்ஆர்ஆர் ('RRR') மற்றும் 'சலார்' படங்களுக்குப் பிறகு 'லியோ' மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போதுவரை 'லியோ' படம் ரிலீஸுக்கு முந்தைய வியாபாரத்தில் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்தாக கூறப்படுகிறது, இதன் மூலம் லியோ வெளியீட்டுக்கு முன்னதாகவே தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
பான் இந்திய படமாக வெளியாகும் லியோ படத்தின் வியாபாரம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், படம் பாக்ஸ் ஆபிஸிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விஜய் மற்றும் அர்ஜுன் சார்ஜா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கேங்ஸ்டர் ஆக்ஷன் நாடகமாக அறிவிக்கப்படும், விஜய் 'லியோ'வில் இரக்கமற்ற கேங்ஸ்டராகக் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் லியோ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“