நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், இதுவரை 1.2 கோடி மதிப்பிலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023-ம் ஆண்டு இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ள லியோ படம், ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களாக இந்த படத்தில் இருந்து வெளியாகும் அப்டேட்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், படத்தின் முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டது.
இந்நிலையில் லியோ படத்தின் முன்பதிவு தொடங்கிய ஒரே நாளில், லியோவின் 446 ஷோக்களுக்கு 64,229 டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் லியோ இதுவரை 1.20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதில் சென்னையில் இருந்து 70 சதவீத முன்பதிவு செய்யப்பட்டதன் மூலம் சென்னையில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டள்ளது. லியோ மதுரையில், முன்பதிவில் 34 சதவீத பங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2021-ம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 2-வது படம் லியோ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். கில்லி, குருவி, திருப்பாச்சி மற்றும் ஆதி போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து இந்த ஜோடி 5-வது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது. மேலும் சஞ்சய் தத்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கேஜிஎஃப்: 2 மூலம் கன்னடத்தில் அறிமுகமான பிறகு சஞ்சய் தத் தற்போது லியோ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருடன் அர்ஜுன் சர்ஜா, மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
முன்னதாக, சென்னையில் செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெறவிருந்த லியோ ஆடியோ லாஞ்ச் போலி டிக்கெட் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள்" காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“