விஜய் நடித்து வரும் லியோ படத்தில் அவரது அப்பாவாக நடிக்கும் நடிகர் யார் என்பது தொடர்பான தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் வாரிசு படத்திற்கு பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
லலித் தயாரித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. லியோ படம் குறித்து ஏற்கனவே வெளியான ஒரு டிரெய்லர் வீடியோவில் படம் அக்டோபர் 19-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் லியோ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் விஜய் மற்றும் சஞ்சய் தத் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீர் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது விஜய்க்கு அப்பாவாக சஞ்சய் தத் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இருவரும் இந்த படத்தில் கேங்ஸ்டர் ஆக நடிப்பதாகவும் விஜய் மற்றும் சஞ்சய் தத் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் லியோ படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார்.
பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“