வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள நிலையில், பிரபல இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் அட்லி உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் நடித்துள்ள படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகிபாபு என பல நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளர்.
தமன் இசையமைத்துள்ள வாரிசு படத்தில் இருந்து ஏற்கனவே ரஞ்சிதமே, தீ தளபதி என இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில். வாரிசு படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது வெளியாகும் என்று இசையமைப்பாளர் தமன் அளிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களும் ஆட்டம் போட வைக்கும் வகையில் இருந்த நிலையில், சமீபத்தில் வெளியான 3வது சிங்கிள் அம்மா செண்டிமண்ட் பாடலான ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடலும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சிவகாசி படத்திற்கு பிறகு விஜய் படத்தில் இடம்பெற்ற அம்மா செண்டிமெண்ட் பாடல் இது என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24-ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி லைவாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சிக்கான செட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அம்மா ஷோபா கலந்துகொண்ட நிலையில், தற்போது வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பிக்பாஸ் ஷூட்டிங்கை கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை மாற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில், சனிக்கிழமை அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாரா அல்லது தனது கட்சியின் பணிகளுக்காக செல்வரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் பங்கேற்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மகேஷ்பாபு வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் மகேஷ்பாபு விஜய் இருவரும் ஒரே மேடையில் இருக்கும் இந்நிகழ்ச்சி வலைதளங்களில் பெரிய ட்ரெண்டிங்காக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இசை வெளியீட்டு விழாவுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 23) ஒருநாள் மட்டுமே பாக்கி உள்ள நிலையில், ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். மேலும் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில், இந்த நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசுவார் என்பது குறித்து பலருக்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது
இந்நிலையில், தற்போது இவ்விழாவிற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் பரவத்தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
மேலும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால், கொரோனா கட்டப்பாடுகள் விதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் விழாவுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதால் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“