காதலியுடன் புது வீட்டில் குடியேறும் பாலிவுட் நடிகர்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன் தனது காதல் மனைவி சுஷானை கடந்த 2014-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். பிள்ளைகளை இருவரும் சேர்ந்தே கவனித்து வரும் நிலையில், ஹிருத்திக் ரோஷன், தற்போது ஷபா ஆசாத் என்ற நடிகையை காதலித்து வருகிறார். சமீப காலமாக இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஹிருத்திக் ரோஷன் ஏற்கெனவே மும்பை வெர்சோவா கடற்கரை பகுதியில் புதிதாக வாங்கியுள்ள ஆடம்பர சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தில் தனது காதலியுடன் ஹிருத்திக் ரோஷன் குடியேற முடிவு செய்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படம்
சசிகுமார் நடிப்பில் நேற்று (நவம்பர் 18) வெளியான நான் மிருகமாய் மாற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தொடர்ந்து அடுத்து வாரம் (நவம்பர் 25) சசிகுமார் நடிப்பில் ஹேமந்த இயக்கியுள்ள காரி படம் வெளியாக உள்ளது. பார்வதி அருண், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தின் டிரெயலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நயன்தாராவின் அடுத்தப்படம் ககென்ட்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா நேற்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், நயன்தாராவின் நடிப்பில் வெளியாக உள்ள கனெக்ட் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் ஹாரார் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இந்த படம் டிசம்பர் 22-ந் தேதி வெளியாக உள்ளது.
விஜய்க்கு ஆதரவாக சீமான் பேச்சு
பொங்கல் தினத்தில் நேரடி தெலுங்கு படத்திற்கு முன்னுரிமை அளித்து தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று ஆந்திராவின் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் வெளியிட்டுள்ளதால் விஜயின் வாரிசு படம் அங்கு வெளியாகவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த முடிவை திரும்ப பெறாவிட்டால் தெலுங்கு படங்கள் இங்கு வெளியாக விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.
கோடிகளை குவிக்கும் லவ்டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த நவம்பர் 4-ந் தேதி வெளியான லவ்டுடே படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூலில் சாதனை படைத்து வருகிறது. தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து படம் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படுகிறது. இதனிடையே லவ்டுடே படம் தமிழகத்தில் மட்டும் 47 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“