தமிழில் தோழா படத்தின் மூலமும் தெலுங்கில் மகரிஷி போன்ற பல பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய வம்சி முதன்முதலாக விஜய்யுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் வாரிசு படம் இன்று தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது இப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?இல்லையா? என்பதை பார்ப்போம்.
இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளன அதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் சரத்குமார்-ஜெயசுதா இருவரும் தம்பதியராகவும், ஸ்ரீகாந்த், ஷாம்,விஜய் ஆகியோர் அவர்களுடைய மகன்களாகவும் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்தியின் மனைவியாக சங்கீதாவும், ஷாமின் மனைவியாக சம்யுக்தாவும் வருகிறார்கள். வில்லனாக பிரகாஷ்ராஜும் அவருடைய மகனாக கணேஷ் வெங்கட்ராமன் வருகிறார்கள்.
சங்கீதாவின் சகோதரியாக நாயகி ராஷ்மிகா வருகிறார் குடும்பத்தின் வேலைக்காரராக யோகி பாபுவும்,குடும்ப டாக்டராகவும் பிரபுவும் நடித்துள்ளனர். மேலும் எஸ்.ஜே.சூர்யா,குஷ்பூ ஆகியோர் சர்ப்ரைஸ் ரோலிலும் நடித்துள்ளனர்.
படத்தின் கதை
தனது வாழ்க்கையே பிசினஸ் தான் என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் சரத்குமார்.தனது மூன்று மகன்களான ஶ்ரீகாந்த், ஷ்யாம், விஜய் ஆகியோரில் யார் பிசினஸில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களையே தனது கம்பெனியின் அடுத்த வாரிசாக அறிவிக்க திட்டமிடுகிறார். ஆனால் அப்பாவினுடைய தயவில் வாழ விருப்பமில்லாத விஜய் தனியாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்று எண்ணுகிறார். இதனால் சரத்குமாருக்கும் விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு,விஜய் வீட்டை விட்டு வெளியேறி தனியே வாழ்கிறார்.
அதன் பிறகு தனக்கு கேன்சர் நோய் இருப்பதை தெரிந்து கொண்ட சரத்குமார் தன் குடும்பத்திற்காகவும், மனைவிக்காகவும் அறுபதாம் கல்யாணம் செய்ய திட்டமிடுகிறார். இதற்காக ஏழு ஆண்டுகள் கழித்து தன் பெற்றோருடைய கல்யாணத்திற்கு விஜய் வருகிறார். அந்த நிகழ்வில் தன்னுடைய மூத்த மகன் ஸ்ரீகாந்திக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், கடன் தொல்லையால் பிசினஸ் ரகசியங்களை தனது போட்டியாளரான கணேஷ் வெங்கட்ராமனிடம் ஷாம் அடகு வைத்திருப்பதும் தெரிய வரவே அதிர்ச்சிக்குள்ளாகிறார் சரத்குமார். இதனால் தனது பிசினஸ் வாரிசாக அதிரடியாக விஜயை அறிவிக்கிறார். அதன் பிறகு விஜய் எவ்வாறு இழந்த பிசினஸை மீட்டெடுக்கிறார் என்பதையும் எப்படி எதிரிகளை களமாடுகிறார் என்பதையும் கமர்சியல் ஃபார்மில் சொல்லி இருக்கும் படமே வாரிசு..
படத்தின் ஆணிவேராக பார்க்கப்படுவது விஜயின் இயல்பான நடிப்பு. 90’ஸ் விஜயிடம் பார்த்த அந்த துரு துருப்பான,இளமையான மேனரிசத்தை இப்படத்திலும பார்க்க முடிகிறது. அவருடைய ஒவ்வொரு வசனங்களிலும், காட்சிகளிலும், ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுக்கும் ஒரு காந்தமாக விஜய் இப்படத்தில் தெரிகிறார். விஜயின் நடனம் என்றால் சொல்லவா வேண்டும்? இருந்தாலும் இப்படத்தில் அவருடைய நடன அசைவுகளை பார்க்கும்போது சவுத் இந்தியாவின் சிறந்த டான்ஸர் இவர்தான் என்று எண்ணும் அளவிற்கு பட்டையை கிளப்பியிருக்கிறார்.
ஆக்சன் காட்சிகளில் தெறிக்க விடுகிறார், ஒவ்வொரு சண்டை காட்சிகளும் புல்லரிக்க வைக்கிறது. மேலும் குடும்பம்,அம்மா, உறவுகள் என அவர் பேசும் வசனங்களில் ரசிகர்களை நெகிழ வைக்கிறார். விஜய்க்கு அடுத்து, படத்தின் பெரிய தூண்களாக பார்க்கப்படுவது சரத்குமார்,ஜெயசுதா மற்றும் பிரகாஷ்ராஜினுடைய நடிப்பு. இவர்கள் மூவருமே அந்த கேரக்டராகவே வாழ்ந்து நம்மையும் அந்த படத்திற்குள் இணைய வைக்கின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயின் வில்லனாக வரும் பிரகாஷ்ராஜின் காட்சிகளில் பல தெலுங்கு படங்களின் சாயல் இருந்தாலும்,சற்று வில்லத்தனம் புதிதாகவே இருக்கிறது.
நாயகி “ராஷ்மிகாவிற்கு” பெரிய அளவில் படத்தில் ஸ்கோப் இல்லை என்றாலும் அவர் வரும் ஒரு சில காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். மேலும் ரஞ்சிதமே பாடலுக்கு விஜய்க்கு நிகரான நடனத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். “சர்க்கார், பீஸ்ட்டில் யோகிபாபுவின் காமெடி பெரிய அளவில் எடுபடவில்லை என்னும் விமர்சனம் எழுந்தது, ஆனால் இந்த முறை அந்த விமர்சனத்தை தவிடுபொடியாக்கி விஜய்-யோகி பாபு இணையும் காமெடி காட்சிகள் நம்மை சிரிப்பு சரவெடியில் ஆழ்த்துகிறது.
மற்றபடி இப்படத்தில் வரும் அனைவரும் அவர்களுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து படத்தின் திரைக்கதையை உயிர்ப்புடன் வைத்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளர் தமனை படத்தின் மற்றொரு ஹீரோ என்றே சொல்லலாம்,அந்த அளவிற்கு அவருடைய பாடல்களும்,பின்னணி இசையும் படத்தின் உணர்ச்சிகளை நம்முள் கடத்துகின்றது. நிறைய இடங்களில் வசனங்கள் இல்லாமல் வெறும் அவருடைய பின்னணி இசையின் மூலமே நம்மை நெகிழ வைக்கிறார். ஏற்கனவே ஹிட் அடித்த பாடல்களை பிரம்மாண்டமான கலர்ஃபுல் காட்சிகளாக பார்க்கும்போது நமக்கு மேலும் பிடிக்கிறது. ஆக்சன் காட்சிகளில் அவருடைய பி.ஜி.எம் திரையை கிழிக்கும் அளவிற்கு அதிர்கிறது.
குடும்ப படங்களுக்குப் பேர் போன “வம்சி” மற்றுமொரு குடும்பங்கள் கொண்டாடும் படமாக இதை அமைத்துள்ளார். படம் ஒரு சில இடங்களில் தெலுங்கு படத்தை போல தோன்றினாலும் படத்தில் அவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களும், உணர்வுகளும் மக்களிடையே கனெக்ட் ஆவதை நம்மால் பார்க்க முடிகிறது. படத்தின் நீளம் சற்று ரசிகர்களை சோதிப்பதாகவும் அமைந்திருக்கிறது. மற்றபடி நாம் ஏற்கனவே பார்த்து பழகிய கதையில் விஜய் என்னும் நட்சத்திரத்தை வைத்து ஆங்காங்கே சில பல மாற்றங்களை செய்து தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற விதத்தில் படத்தை கொடுத்திருக்கிறார்.
படத்தின் விஷுவல்சும், பாடல் காட்சிகளும், லொகேஷனும் பிரம்மாண்டத்தை ஏற்படுத்துவதை நம்மால் காண முடிகிறது அதற்கு காரணமான படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவிற்கு பாராட்டுக்கள். படம் குடும்ப ரசிகர்களின் உணர்வோடு கனெக்ட் செய்தால் இப்படம் மாபெரும் வெற்றி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் கனெக்ட் ஆகுமா? இல்லையா? என்பதை வரும் நாட்களில் அறியலாம். மொத்தத்தில் அன்பு, பாசம்,ஆக்சன்,காமெடி,பாடல்,நடனம் என ஒரு முழு கமர்சியல் பொங்கல் விருந்தாக வந்திருக்கிறது வாரிசு.
படத்தில் சில பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் குடும்பமாக சென்று பார்க்கும் பட்சத்தில் ஒரு நல்ல கமர்சியல் படத்தை பார்த்த திருப்தியை இப்படம் வழங்குகிறது.
நவீன் குமார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“