தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவரும் பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த 90-களில் அவர்களுக்கு இணையாக பல வெற்றிக்களை கொடுத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள விஜயகாந்த் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார்.
அதே சமயம் விஜயகாந்த் முன்னணி நட்சத்திரமாக இருந்த காலகட்டத்தில் அவருடன் நடித்த நடிகர்கள் சினிமா நண்பர்கள் இயக்குனர்கள் என பலரும் அவரது கேரக்டர், உதவி செய்யும் குணம் என பல அறியப்படாத தகவல்களை பகிர்ந்து வருகிறது. அந்த வகையில் ஒரே நேரத்தில் விஜயகாந்த் – ரஜினிகாந்த் நடித்த படங்கள் வெளியான படங்களில் விஜயகாந்த் படம்’ நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளதாக ரஜினிகாந்தே கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 1988-ம் ஆண்டு வெளியான உரிமை கீதம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.வி.உதயகுமார். தொடர்ந்து கிழக்கு வாசல், சின்னக்கவுண்டர், எஜமான், பொன்னுமணி, நந்தவனத்தேரு, சுபாஷ், கற்க கசடற உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக தெலுங்கில் மிஸ்டர் ராஸ்கல் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் தமிழில் வெளியான திருட்டுப்பயலே படத்தின் ரீமேக்.
இந்நிலையில், ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படம் வெளியான அதே நாளில் ரஜினியின் மன்னன் திரைப்படம் வெளியானது. இதில் அனுரக அரலிது என்ற கன்னட படத்தின் ரீமேக்காக வெளியான மன்னன் படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருந்தாலும், சின்னக்கவுண்டர் படம் மன்னன் படத்தை விட அதிக வரவேற்பை பெற்றதாக இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கூறியுள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், மன்னன் சின்னக்கவுண்டர் 2 படங்கயுளும் ஒரே நாளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்போது ஒருநாள் ரஜினிகாந்த் எனக்கு போன் செய்து என்ன உதயகுமார் எப்படி போய்ட்டு இருக்கு என்று கேட்டார். நான் மன்னன் நம்பர் 1 சின்னக்கவுண்டர் நம்பர் 2 என்று சொன்னேன். அதற்கு அவர், சின்னக்கவுண்டர் நம்பர் 1 மன்னன் நம்பர் 2 நான் எல்லா தியேட்டர்லயும் விசாரிச்சிட்டேன் என்று சொன்னார். அதன்பிறகு தான் அவருடன் எஜமான் படத்தில் இணைந்தேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil