தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகாந்த் தனது நிஜ வாழ்க்கையிலும் ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நின்று எதிர்கொள்வார் என்பதற்கு உதாரணமாக நடிகர் சத்யராஜ் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
எம்.ஏ. காஜா இயக்கத்தில் கடந்த 1979-ம் ஆண்டு வெளியாக இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஜயகாந்த். அந்த படம் வெற்றி பெற்றதை தோடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆன இவர், தொடர் வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக மாறிய விஜயகாந்த், படப்பிடிப்பின்போது கொடுக்கப்படும் உணவில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.
அதேபோல் நடிகர் சங்கம் கடனில் மூழ்கியிருந்தபோது, அதன் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்ட விஜயகாந்த், வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து மீட்டு வந்தவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமாக உணவு அளிக்க வேண்டும் என்று நினைத்த விஜயகாந்த் அதனை செய்தும் காட்டியுள்ளார். அவரின் அலுவலகத்தில் எப்போது சென்றாலும் சாப்பாடு இருக்கும் என்ற நிலையும் இருந்து வருகிறது.
சினிமாவில் மட்டுமல்ல, ரியல் வாழ்க்கையிலும், ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நிற்கும் விஜயகாந்த், சக நடிகர்களுக்காக பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளார். அப்படி ஒரு சமயம், பெப்சி தொழிலாளர்களுக்கும், படப்பிடிப்பு குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டு சில வாரங்கள் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது இயக்குனர் பாலச்சந்தர், முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் சத்யராஜ் உள்ளிட்ட பலர் சமாதான பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளார்.
இயக்குனர் பாலச்சந்தர் அலுவலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்காக விஜயகாந்த் லுங்கியுடன் வந்துள்ளார். செல்போன் இல்லாத காலக்கட்டத்தில், அவருக்கு போன் செய்த உடனே வர வேண்டும் என்பதால் லுங்கியுடன், பேச்சு வார்த்தைக்கு வந்துள்ளார். இந்த தகவலை சமீபத்திய பேட்டியில் நடிகர் சத்யராஜ் பகிர்ந்துள்ள நிலையில், விஜயகாந்த் லங்கியுடன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“