தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த். தன்னை தேடி வருபவர்களுக்கு மட்டுமல்லாமல் பலரையும் தேடிச்சென்று உதவி செய்தவர் என்று பலரும் இவரைப்பற்றி சொல்வது உண்டு. அதேபோல் இவரை சந்திக்க சென்றால் சாப்பிட வைத்து தான் அனுப்புவார் என்பது இன்று பலரும் அறிந்த ஒரு தகவல். அப்படி ஒரு சம்பவத்தை பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சிவா கூறியுள்ளார்.
விஜயகாந்த் நடிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான படம் உழவன் மகன். ஊமை விழிகள் படத்திற்கு பிறகு ஆபாவானன் கதையில், அரவிந்த் ராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், விஜயகாந்த், ராதிகா, ராதா, நம்பியார், ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்ராஹிம் ராவுத்தர் இந்த படத்தை தயாரித்திருந்தார். விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
உழவன் மகன் படத்தின் கதையை கேட்காமலே விஜயகாந்த் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் உள்ளது. பொதுவாக தனது படங்களின் படப்பிடிப்பு நடக்கும்போது, படக்குழுவினர் அனைவருக்கும் ஒரு மாதிரியான சாப்பாடு இருக்க வேண்டும் என்று விரும்புவபர். அதனால் அனைவருக்கும் சமமான சாப்பாடு கொடுக்க வேண்டும் என்றும், இதற்கான செலவை எனது சம்பளத்தில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அதேபோல் 1987-ம் ஆண்டு உழவன் மகன் படப்பிடிப்பு ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நாளில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தின் படப்பிடிப்பும் நடந்துள்ளது. இதில் நாயகன் படத்தின் படப்பிடிப்பில், படக்குழு அனைவருக்கும் தயிர் மற்றும் தக்காளி சாதம் வழங்கப்பட்டபோது, உழவன் மகன் ஷூட்டிங்கில், அனைவருக்கும் கறிவிருந்து வைத்துள்ளார். விஜயகாந்த். மேலும் இதை அன்லிமிட்டெடாக கொடுக்க வேண்டும் என்பதே விஜயகாந்த் செய்த சாதனை.
சாப்பாடு அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறினாலும், அனைவரும் சாப்பிடும்போது, யார் யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டக்கொண்டே சாப்பிடும் இடத்தில் சுற்றிக்கொண்டு இருப்பார் விஜயகாந்த். அனைவருக்கும் எந்த குறையும் இல்லை என்ற தெரிந்த பிறகு தான் அவர் சாப்பிட செல்வார் என்று சிவா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“