விக்ரம் நடிப்பில் சித்தா எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் தாயராகியுள்ள வீர தீர சூரன் படம் இன்று (மார்ச் 27) வெளியாக இருந்த நிலையில், படத்திற்கு இடைக்காத தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 7 கோடி பணம் செலுத்த 48 மணி நேரம் கெடு விதித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விக்ரம், தங்கலான் படத்திற்கு பிறகு தனது 62-வது படமாக எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்துள்ளார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி சித்தா ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அருண்குமாரின் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெர்ஜினமூடு ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் இன்று (மார்ச் 27) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படக்குழுவினர் கடந்த சில தினங்களாக படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காட்சி ரத்து செய்யப்பட்டது. இதனிடையே படத்திற்கு தற்போது இடைக்காத தலை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் காரணமாக, காலை 9 மணி் காட்சிக்கு, டிக்கெட் புக் செய்தவர்களின் பணம் திருப்பி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விக்ரம் ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த படத்திற்கு நிதியுதவி அளித்த, பி4யு எண்டடெய்ண்ட்மெண்ட் நிறுவனம் படத்தின் பெரும்பாலான பங்குகள் தங்களிடம் உள்ளதாகவும், தங்கள் அனுமதியை பெறாமல், படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துவிட்டதாகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணையில், வீர தீர சூரன் படத்தை தயாரித்த எச்.ஆர்.பிச்சர்ஸ் நிறுவனம், 7 கோடி டெப்பாசிட் செய்யவும், படம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் 48 மணி நேரம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் படத்தை வெளியிட 4 வாரங்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளதால், வீர தீர சூரன் திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போகிறது. இதனால் விக்ரம் ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
இதனிடையே தற்போது வீர தீர சூரன் திரைப்படத்தின் பிரச்னைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், படத்தின் முதல் காட்சி மாலை 6 மணிக்கு, திரையிடப்படும் என்று படத்தின் இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.