ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 3 நாட்களில் படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுவரை 80 கோடிக்கு மேல் வசூலித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.
ரஜினியின் முந்தைய படங்களாக தர்பார், அண்ணாத்த ஆகிய 2 படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், ஜெயிலர் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஜெயிலர் அமைந்துள்ளதாகவும், நெல்சன், ரஜினியை வித்தியாசமாக கோணத்தில் காட்டியுள்ளார் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு வெயிட்டான வில்லனாக நடித்திருப்பவர் விநாயகன். தனது வில்லன் கேரக்டரில் முக்கியத்துவத்தை அறிந்து வித்தியாசமாக நடித்துள்ள விநாயகனுக்கு ரசிகர்கள் விமர்சகங்கள் என பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், ஜெயிலர் படத்தை குறிப்பிட்டு பேசினால் ரஜினிகாந்த் போல விநாயகனனையும் குறிப்பிட்டு பேசும் அளவுக்கு நடிப்பில் அசத்தியுள்ளார் என்று கூறி வருகினறனர்.
ரஜினி என்ற லெஜண்ட் நடிகருக்கு எதிராக சிறப்பாக நடித்துள்ளார் யார் இந்த விநாயகன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கேரளா மாநிலத்தை சேர்ந்த விநாயகன், கஷ்டமான குடும்பத்தில் பிறந்து தற்போது வில்லனாக மிரட்டி வரும் விநாயகன் அடிப்படையில் ஒரு டான்ஸர். பிளாக் மெர்குரி என்ற பெயரில் டான்ஸ் குழுவை நடத்தி வரும் விநாயகன் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு தேடியுள்ளார்.
அப்போது பிரபல மலையாள இயக்குனர் தம்பி கண்ணன்தனம் இயக்கத்தில் மோகன்லால் நடித்த மாந்திரீகன் என்ற படத்தில் நடித்திருந்தார். 1995-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விநாயகனின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றிருந்தாலும், அடுத்து அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தனது டான்ஸ் குழுவை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.
6 வருட இடைவெளிக்கு பிறகு தம்பி கண்ணன்தனம் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ஒன்னாமேன் என்ற படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ஸ்டாப் வைலன்ஸ், வெள்ளித்திரை, இருவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். மலையாளத்தில் கொஞ்சம் பிரபலமான விநாயகன் திமிரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஸ்ரோயா ரெட்டியின் அடியாளாக நடித்த விநாயகன், சிலம்பாட்டம், காளை என சிம்பு படத்தில் நடித்திருந்தார்.
கடைசியாக தனுஷ் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மரியான படத்தில் நடித்திருந்த விநாயகன் 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜெயிலர் படம் மூலம் தமிழில் ரீ-என்டரி ஆகியுள்ளார். அதேபோல் ஜெயிலர் படத்தில் முதலில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் மம்முட்டியை யோசித்தாகவும், ஆனால் வில்லனை உதைப்பது போல் காட்சிகள் உள்ளதால் அவர் வேண்டாம் என்று படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
அப்போது தான் விநாயகன் மலையாளம் கலந்த தமிழுடன் அளித்த பேட்டியை பார்த்த இயக்குனர் நெல்சன் இவரை தொடர்கொண்டு ஜெயிலர் படத்தின் கதையை கூறியுள்ளார். கதையை கேட்ட விநாயகன் இந்த படத்தில் வில்லனாக இல்லை ரஜினி சார் படம் என்பதால் சிறிய வேடத்தில் கூட நடிக்க தயார் என்று கூறியிருக்கார். அப்படித்தான் விநாயகன் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார். இன்னும் சில வருடங்கள் தமிழில் சினிமாவில் வில்லனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil