பயங்கரமான வில்லனின் (ரமணா) மகனை லத்தியால் அடித்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்படும் நாயகன்(விஷால்), பின் மீண்டும் பணிக்கு திரும்பும் போது வில்லன் கும்பலால் தனக்கும் தன் குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு சமாளித்து அந்த ரவுடி கும்பலை அழித்தார் என்பதுதான் "லத்தி" படத்தின் கதை.
ஆக்சன் படம் என்றாலே கண்ணை மூடிக்கொண்ட "விஷால்" படம் தான் என்றும் சொல்லும் அளவிற்கு வரிசையாக ஆக்சன் படங்களை கொடுத்து வருகிறார் விஷால். பொதுவாகவே அவரது படங்களில் வரும் ஆக்சன் காட்சிகள் நம்பும் படியாகவும்,அதே சமயம் மாஸாகவும் இருக்கும். ஆனால் இப்படத்தில் வரும் ஆக்சன் காட்சிகளை பார்க்கும் போது அவர் இப்படத்திற்காக எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.
திரையில் ஆக்சன் காட்சிகளுக்கு விழும் மக்களின் கைதட்டல்களில் விஷால் உழைப்பிற்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளார். இரண்டாம் பாதியில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்க விடும் விஷால், சென்டிமென்டிலும் கலக்கியிருக்கிறார். மற்ற படங்களை விட இப்படத்தில் மாஸ் காட்சிகளை குறைத்து, இயல்பான நடிப்பையே வெளிப்படுத்தி அதன் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார் விஷால்.
படத்தின் மற்றுமொரு ஹீரோவாக பார்க்கப்படுவது சண்டை மாஸ்டர் "பீட்டர் ஹெய்ன்". "படத்தில் சண்டை இல்லை, சண்டைதான் படமே" என சொல்லும் அளவிற்கு இரண்டாம் பாதி முழுவதும் ஆக்சன் காட்சிகளால் நிறைந்திருக்கிறது. அதே சமயம் எந்த இடத்திலும் அது சலிப்பை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக கிளைமாக்சில் வரும் சண்டைக்காட்சிகள் ரத்தம் தெறிப்பதாக இருந்தாலும் அதை நம்பும் படியாகவும், ஏற்றுக்கொள்ளும்படியாகவும் கொடுத்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார் பீட்டர் ஹெய்ன்.
வில்லனாக ரமணா மிரட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவருடைய கம்பீரமான தோற்றமும் உடல் மொழியும் மிரள வைக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பல இடங்களில் படத்தின் காட்சிகளை ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறது. பாடல்கள் கேட்கும் படியாகவும், பாடல் காட்சிகள் ரசிக்கும் படியாகவும் அமைந்துள்ளது. சுனைனா, பிரபு, தலைவாசல் விஜய், முனிஷ்காந்த் ஆகியோர் ஒரு சில காட்சிகளிலே வந்தாலும் அவர்களுக்கான இடத்தை சரியாக பயன்படுத்தியுள்ளனர். பாலசுப்பிரமணியன் மற்றும் பாலகிருஷ்ணாவின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகளை உயிர்ப்புடன் ரசிக்க உதவுகிறது.
ஹீரோ- வில்லன் இவர்களுக்ககுள் நடக்கும் சண்டை என தமிழ் சினிமாவிற்கு பழக்கப்பட்ட கதைதான் என்றாலும் திரைக்கதையில் ஓரளவிற்கு விறுவிறுப்பை காட்ட முயன்றிருக்கிறார் அறிமுகம் இயக்குனர் வினோத் குமார். வில்லன்களை எல்லாம் ஒரே இடத்திற்கு வரவழித்து அழிப்பது என்பதை வேறுபடத்தில் நாம் பார்த்திருப்பதாக தோன்றினாலும்,விஷால் மற்றும் பீட்டர் ஹெயினின் அர்ப்பணிப்பு அதை மறக்கடிக்க வைக்கிறது.
ஆக்சன் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இப்படம் அமையலாம். மொத்தத்தில் சண்டைக் காட்சிகளில் இவர்கள் காட்டியிருக்கும் விறுவிறுப்பையும், பரபரப்பையும், ஓரளவுக்கு திரைக்கதையில் காட்டி இருந்தால் கூட இது சாதாரண படமாக இல்லாமல் சிறப்பான படமாக அமைந்திருக்கும்.
நவீன் குமார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“