விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் Sci-Fic படமாக இன்று வெளியாகியிருக்கும் "மார்க் ஆண்டனி" படத்தின் முழு விமர்சனம்.
கதைக்களம்:
விஞ்ஞானியான சிரஞ்சீவி,(செல்வராகவன்) டைம் டிராவல் செய்யும் ஒரு தொலைபேசி கருவியை கண்டுபிடிக்கிறார். கடந்த காலத்திற்கு போன் பேசி எதிர்காலத்தை மாற்ற அந்த கருவிக்கு சக்தி உண்டு. இந்த கருவி, 1975-களில் கேங்ஸ்டர்களாக வலம் வரும் ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா) மற்றும் ஆண்டனி (விஷால்) ஆகிய இருவரையும், 1995ல் இருக்கும் ஜாக்கியின் மகனான மதன் பாண்டியனையும், ஆண்டனியின் மகனான மார்க்கின் வாழ்க்கையையும் எப்படி புரட்டிபோடுகிறது என்பதை பல ட்விஸ்ட்களுடன் சொல்லி இருக்கும் படமே "மார்க் ஆண்டனி"
நடிகர்களின் நடிப்பு :
விஷால்:
விஷாலை நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த கதைக்களத்தில் நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். டெரர் அப்பாவாகவும், அப்பாவி மகனாகவும் குரல் உள்ளிட்ட அனைத்து உடல்மொழிகளிலும் வித்தியாசம் காட்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இன்றைய காலத்து ஆக்சன் கிங் என விஷாலை தைரியமாக சொல்லும் அளவிற்கு வெறித்தனமாக ஸ்டண்ட் செய்திருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா:
படத்தின் மற்றொரு நாயகன் என்றுதான் எஸ்.ஜே.சூர்யாவை சொல்ல வேண்டும்."நடிப்பு அரக்கன்" என்னும் பட்டத்திற்கு உரித்தான அனைத்து அம்சங்களும் திரையில் கொட்டி தீர்த்திருகிறார். உடல் மொழி, வசன உச்சரிப்பு, காமெடி, கதாபாத்திரங்களுக்கு இடையே காட்டும் வித்தியாசம் என படம் முழுக்க அவருடைய அட்ராசிட்டிகள் ஏராளம். எஸ்.ஜே.சூர்யா நடிபிற்காகவே ஒரு கூட்டம் தியேட்டருக்கு வருவதை இப்படம் உணர்த்தியுள்ளது. அவருடைய திரை வாழ்வில் போற்ற கூடிய படங்களில் இப்படமும் இணைந்துள்ளது.
செல்வராகவன், அபிநயா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி, சுனில், நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரின் நடிப்பும் சிறப்பு.சிறிது நேரமே வந்தாலும், சில்க் ஸ்மித்தாவாக நடித்த விஷ்ணு காந்தி பிரியா கவனம் பெறுகிறார்.
இயக்கம் மற்றும் இசை
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய படத்தின் தோல்வியில் இருந்து மீண்டு இப்படியொரு குடும்பங்கள் ரசிக்கும் படத்தை கொடுத்ததற்கு வாழ்த்துகள். இது போன்ற டைம் டிராவல் கதையில் திரைக்கதை தான் மிகவும் முக்கியம் அதில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் படம் ரசிகர்களுக்கு புரியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புரியும் படியாகவும், ரசிக்கும் படியாகவும் கொடுத்து திரைக்கதையில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர். ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை படத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. புது பாடல்களை விட பல பழைய பாடல்களை ரீமேக் செய்து ரசிகர்களை கொண்டாட வைக்கிறார்.
படம் எப்படி ?
டைம் டிராவல், வின்டேஜ் சாங்ஸ், சில்க் கேரக்டர், டான்ஸ், ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்துமே சரியான அளவில் கொடுத்து ஒரு பக்கா கமர்ஷியல் ட்ரீட்டை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ரசிகர்களை ஜாலி Modeலயே கட்டி போட்டிருக்கிறார்கள். மேலும் படத்தில் குறை சொல்ல நமக்கு எந்த வாய்ப்பையும் படக்குழு கொடுக்கவில்லை. மொத்தத்தில் நண்பர்களுடனும், குடும்பத்துடனும் கொண்டாட வைக்கும் ஒரு பக்கா கமர்ஷியல் படமாக "மார்க் ஆண்டனி" அமையும்.
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“