சிறுவயதிலிருந்தே தன் தந்தையை இழந்த நாயகன்(விஷ்ணு விஷால்),ஊர் தலைவரான கருணாசுடன் இணைந்து பிரச்சனைகளை செய்வதும், வெட்டியாக ஊர் சுற்றுவதையுமே தன் முழு நேர தொழிலாக செய்கிறார். மேலும் அவர் தனக்கு வரக்கூடிய மனைவிக்கு முடி நீளமாக இருக்க வேண்டும், தனக்கு கீழ் படித்தவராக இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் பெண் தேடுகிறார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு மனைவியாக அமையும் நாயகிக்கு(ஐஷ்வர்யா லட்சுமி) அந்த நிபந்தனைகள் ஒத்துப் போகவில்லை என்பது ஒரு கட்டத்தில் நாயகனுக்கு தெரிய வர அதன் பின் இவர்கள் வாழ்வில் நடக்கும் விஷயங்களை சுவாரசியமாகவும், கலகலப்பாகவும் சொல்லி இருக்கும் படமே கட்டா குஸ்தி.
FIR என்ற வெற்றி படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் இப்படத்தில் கமர்சியல் நாயகனாக காமெடி, சென்டிமென்ட், ஆக்சன், ரொமான்ஸ், ஆங்காங்கே குஸ்தி என அனைத்து துறைகளிலும் கலக்கியிருக்கிறார். தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷாலிற்கு இப்படம் கமர்சியல் ரீதியாக ரசிக்க வைப்பது மகிழ்ச்சி. சண்டைக் காட்சிகளில் தெறிக்க விடுகிறது அவருடைய ஆக்டிங்.
படத்தின் மற்றொரு பெரிய பலம் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி. பொன்னியின் செல்வனுக்கு பிறகு ஒரு மிகப் பெரிய கதாபாத்திரம் அதை கச்சிதமாக செய்திருக்கிறார். அவருடைய காமெடிகள் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றனர். அவருடைய ஆக்சன் காட்சிகள் அதகளம். பெண்களுக்காக அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் கைதட்டை பெறுகின்றது. தன் கணவருக்கு எதிராகவே குஸ்தி செய்யும் காட்சிகளில் அவருடைய உழைப்பும், அர்ப்பணிப்பும் பிரம்மிக்க வைக்கிறது.
மேலும் இப்படத்தில் காமெடி காட்சிகள் பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்தை மேலும் ரசிக்க உதவுகிறது. கருணாஸ், முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி மற்றும் காளி வெங்கட் இவர்கள் வரும் காட்சிகளில் தியேட்டர் முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஊர் தலைவராக வரும் கருணாஸின் கதாபாத்திரம் இன்னும் பல ஊர்களிலும், கிராமங்களிலும் ஆண்களுக்கு கீழ் தான் பெண்கள் என்ற பிற்போக்கு சிந்தனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஆண்களின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.
ஒரு சாதாரண கதை என்றாலும் அதில் கமர்சியல் படத்திற்கான எல்லா அம்சங்களையும் அதற்கான அளவில் வைத்து சுவையான விருந்தாக பரிமாறி இருக்கிறார் இயக்குனர் செல்ல அய்யாவு. படம் கலகலப்பாகவும், சுவாரசியமாகவும் சென்றாலும்இரண்டாம் பாதியில் வரும் பெண் உரிமைகளுக்கான வசனங்களும், காட்சிகளும் அப்ளாசை அள்ளுகிறது.ஜஸ்டின் பிரபாகருடைய பாடல்கள் கேட்கும் விதமாக அமைந்திருக்கிறது.
மேலும் அவருடைய பின்னணி இசை படத்திற்கு தேவையான யதார்த்தத்தை கொடுத்துள்ளது சிறப்பு.மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று ஜாலியாக ரசிக்கும் படமாக அமைந்துள்ளது கட்டாகுஸ்தி.
நவீன்குமார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil