தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே பான் இந்தியா படமாக நடித்த பெருமைக்கு சொந்தக்காரரான பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் முதல்முறையாக 2 மொழிகளில் தயாரான தமிழ் படம் வெளியாகாமல் போனது குறித்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
1919-ம் ஆண்டு கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியில் பிறந்தவர் நம்பியார். அதன்பிறகு அவரது குடும்பத்தினர் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்தனர். தனது பள்ளிப்படிப்பை நீலகிரியில் முடித்த நம்பியார், தான் பள்ளிக்கு செல்லும் வழியில் அன்றைய காலகட்டத்தில் நாடக கலையில் சிறந்து விளங்கிய நவாப் ராஜமாணிக்கத்தின் குருகுலத்தை கண்டுள்ளார்.
பள்ளி செல்லும்போது அங்கே இருக்கும் கலைஞர்கள் செய்யும் சூர்ய நமஸ்காரம் செய்வதை பார்த்து அங்கே சேர வேண்டும் என்று அடம்பிடித்து சேர்ந்துள்ளார். ஒன்றும் தெரியாமல் அங்கே சேர்ந்த அவருக்கு ஒழுக்கத்துடன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்ததாகவும் கூறியுள்ள நம்பியார் அதன்பிறகு தான் நடிப்பை கற்று்கொண்டு சினிமாவிலும் நாடகத்திலும் நடித்து வந்ததாக கூறியுள்ளார்.
பழங்கால தமிழ் சினிமாவை பற்றி பேசினால் எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகியோருடன் நம்பியார் பற்றி கண்டிப்பாக பேச வேண்டிய நிலை வரும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை செதுக்கி வைத்துள்ளவர் நம்பியார். அதேபோல் பழங்கால சினிமாவில் நாயகன் யாராக இருந்தாலும் அதில் வில்லன் எம்.என்.நம்யார்தான். எம்.ஜி.ஆர். சிவாஜி மட்டுமல்லாமல் பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார்
வில்லத்தனத்திலும் காமெடியாக எப்படி வெளிப்படுத்துவது என்பதை பலருக்கும் சொல்லிக்கொடுத்த பெருமைமிக்கவர்களில் முக்கியமான எம்.எஸ் நம்பியார் தனது வாழ்வியல் தொடர்பாக சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தனது முதல் பட வாய்ப்பு மற்றும் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில் சேர்ந்தது குறித்து பேசியுள்ளார்.
நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில் எதுவும் தெரியாமல்தான் சேர்ந்தேன். நாடகத்திற்கு தேவையான நடிப்போ அல்லது பாட்டோ எனக்கு எதுவும் தெரியாது. பையன் கொஞசம் அழகா இருக்கான் அப்படினு சேர்த்துக்கிட்டாங்கனு நினைக்கிறேன். அதன்பிறகு 1935-ம் ஆண்டு நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை பக்தராமதாஸ் என்று ஒரு படம் எடுத்தார். அந்த படத்தில் பெண்களே கிடையாது முழுவதும் ஆண் நடிகர்கள்தான்.
உருது, தெலுங்கு, தமிழ், கன்னடமா உள்ளிட்ட 4 மொழிகளில் அந்த படம் வெளியானது. இதில் அரசரக்கு இருக்கும் இரு மந்திரிகளில் ஒருவராக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு என் திறமையால் கிடைத்தது அல்ல பையன் நல்லாருக்கான் என்று கிடைத்தது. முதலில் இந்த கேரக்டருக்கு வேறு ஒருவரை தேர்வு செய்தார்கள். ஆனால் அவர் மிகவும் பர்சனாலிட்டி கொஞசம் கம்மியாக இருந்ததால் வேறு ஒருவரை தேடிக்கொண்டிருந்தார் இயக்குனர் முருகதாசன்.
அப்போது அவரது கண்களில் நான் படவே இந்த பையன் நல்லாருக்கான என்று சொல்ல அப்படித்தான் கிடைத்தது அந்த வாய்ப்பு. அதன்பிறகு இப்போது ஜெமினி ஸ்டூடியோ உள்ள இடத்தில் மோஷன் பிச்சர்ஸ் இருந்தது. அங்கு இன்பசாகரன் என்ற படம் எடுக்கப்பட்டது. இதுதான் தமிழ்நாட்டில் முதன் முதலாக எடுக்கப்பட்ட இருமொழி திரைப்படம். இந்தியில் இந்த படத்திற்கு பிரேம்சாகரன்.
இந்த படம் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தயராககும் நேரத்தில் எடிட்டிங் ரூமில் அனைத்தும் எரிந்துவிட்டது. இந்த படத்தில் ஹீரோ ஹீரோயின் பாடிய பாடல் தான் சகுந்தலா என்ற படத்தில் இடம்பெற்றது என்று கூறியுள்ளார். முதல் படமே பான் இந்தியா படமாக 4 மொழிகளில் நடித்த நம்பியார், 2வது படம் தமிழில் வெளியாகும் முதல் இரு மொழி திரைப்படம் என்ற பெருமையை பெற வேண்டிய தருணத்தில் துரதிஷ்டவசமாக இப்படி ஆகிவிட்டது. ராமகிருஷ்ணன் எச். என்ற யூடியூப் தளத்தில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/