தமிழ் க்ளாசிக் சினிமாவில் நடிகர் திலகம் என்று பெயரேடுத்தவர் சிவாஜி கணேசன். அதே போல் பாடல்களுக்கு கவியரசர் என்று பெயரேடுத்து முன்னணியில் இருந்தவர் தான் கண்ணதாசன். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தபோதும், கண்ணதாசன் செய்த ஒரு செயலால் அவரை சிவாஜி கணேசன் ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம் தமிழ் சினிமாவில் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உருவாகியது திமுக. எம்.ஜி.ஆர் கருணாநிதி, கண்ணதாசன் சிவாஜி கணேசன் என முக்கிய புள்ளிகள் கட்சியில் இருந்த காலக்கட்டத்தில், சிவாஜி சம்பூர்ண ராமாயணம் என்ற படத்தில் நடிக்க போகிறார். ஆனால் கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட திமுகவில் இருந்து கொண்டு இப்படி நடிக்கலாமா என்று கட்சியில் சிவாஜிக்கு எதிராக சிலர் பேசியுள்ளனர்.
கட்சியில் எனது கொள்ளை வேறு, எனது தொழில் வேறு என்று சிவாஜி விளக்கம் அளித்திருந்தாலும், அவர்கள் பேசுவதை நிறுத்த வில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிவாஜி ஒருமுறை திருப்பதிக்கு சென்றுள்ளார். அவர் அங்கு சென்றதும் பெரும் விவாதமான உருவெடுத்ததால், அவரை ஏன் கட்சியில் இருந்து நீக்க கூடாது என்று பலரும் கேட்க தொடங்கியுள்ளனர். இதை கேட்ட சிவாஜி நீங்க என்ன நீக்குறது நானே வெளியில போய்டுறேன் என்று கூறியுள்ளார்.
இதனிடையே கடந்த 1956-ம் ஆண்டு திரைக்கதையில் சிவாஜி கணேசன் தெனாலி ராமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தெனாலி ராமன் செய்த தவறால் மண்ணுக்குள் புதைக்கப்பட்டு தலை மட்டும் வெளியில் தெரிவது போல் இருப்பார். இந்த புகைப்படத்தை தனது பத்திரிக்கையில் வெளியிட்ட கண்ணதாசன், கணேசா திமுகவில் இனி இதுதான் உன் நிலைமை என்று எழுதியுள்ளார். இதை பார்த்த சிவாஜிக்கு பெரும் கோபம் வந்துள்ளது. ஆனால் அவர் அதை வெளி காட்டிக்கொள்ளவில்லை.
ஒரு சில தினங்களுக்கு பின் வாஹினி ஸ்டூடியோவில் ஒருபுறம் சிவாஜி படமும், மற்றொரு புறம் என்.எஸ்.கிருஷ்ணன் படமும் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஒரு வேலையாக கண்ணதாசன் அந்த ஸ்டூடியோவுக்குள் வர, இவரை பார்த்த சிவாஜி, அவர் பத்திரிக்கையில் எழுதியதை நினைத்து கண்ணதாசனை அடிக்க பாய்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியாக கண்ணதாசன் ஓட சிவாஜி பின்னாடியே அவரை விரட்டியுள்ளார். ஸ்டூடியோ முழுவதும் இந்த தகவல் பரவியுள்ளது. ஒரு கட்டத்தில் கண்ணதாசன் என்எஸ்.கிருஷ்ணன் படப்பிடிப்பிலர் நுழைந்துவிட்டார். இதை கவனித்த என்.எஸ்.கே இருவரையும் தடுத்து நிறுத்தி என்ன நடந்தது என்று கேட்டுள்ளார்.
சிவாஜி நடந்ததை சொல்லிவிட்டு, இவரை ஒரு அறையாவது அறையாமல் விட மாட்டேன் என்று கூறியுள்ளார். அதற்கு என்.எஸ்.கே அவனை அறைந்துவிட்டால் சரியாகிவிடுமா உன்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா என்று கேட்டுள்ளார். இதில் சமாதானமான சிவாஜி அங்கிருந்து புறப்பட்டுள்ளார். என்.எஸ். கண்ணதாசனிடம் பத்திரிக்கை நடந்தினாலும் சினிமா தான் உன் வாழ்க்கை. இனிமேல் இப்படி செய்யாதே என்று சொல்லி அனுப்பியுள்ளார். அதன்பிறகு சிவாஜி – கண்ணதாசன் இருவரும் இணையவில்லை.
சில வருடங்களுக்கு பிறகு சிவாஜி நடித்த பாக பிரிவினை படத்திற்கு ஒரு தாலாட்டு பாடல் கண்ணதாசன் எழுதியிருந்தார். அடுத்து வந்த பாசமலர் படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுத, பாடலை கேட்டு மகிழ்ந்த சிவாஜி கண்ணதாசனை விட்டிற்கு அழைத்து கட்டிபிடித்து பாராட்டியுள்ளார். அதன்பிறகு இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“