தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் பல தத்துவங்களையும் வாழ்க்கையின் முக்கியத்துவங்களையும் உணர்த்திய கவிஞர் கண்ணதாசன், கவிஞர் புலமைபித்தனுடன் மோதல் ஏற்பட்டு கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர்.
சினிமாவில் பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பிஸியாக இருந்து வந்தாலும், கண்ணதாசன் அரசியலிலும் குறிப்பிடத்தக்க ஈடுபட்டுடன் இருந்துள்ளார். தெய்வ நம்பிக்கையுடன் கண்ணதாசன் இருந்தாலும் அவர் அரசியல் பயணம் என்பது தெய்வ நம்பிக்கைக்கு அப்பார்ப்பட்ட திமுகவுடன் தான் இருந்தது.
திமுகவில் இணைந்த சில ஆண்டுகளில் அண்ணா மற்றும் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கண்ணதாசன் கட்சியை விட்டு விலகிவிடுகிறார். அதன்பிறகு திமுகவின் எதிர் கட்சிகளில் தனது பயணத்தை தொடங்கிய கண்ணதாசன், ஒரு கட்டத்தில் தனதுக்கு அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி போனாலும் திமுகவின் கொள்கைகளை எதிர்ப்பவராகத்தான் இருந்துள்ளார்.
முன்னதாக தமிழ் தேசிய கட்சியில் பயணித்த கண்ணதாசன் திமுகவில் இருந்த அண்ணாவை இனி அண்ணாதுரை என்று தான் விமர்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் மேடை பேச்சுக்களில் திமுக மற்றும் அறிஞர் அண்ணாவை பற்றி கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருந்த காலக்கட்த்தில் அவரின் தலைமையில் ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்யப்படுகிறது. திமுகவை சேர்ந்த கவிஞர்கள் அந்த கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவி பாட இருந்தனர்.
கவியரங்கம் தொடங்கியதும் ஒவ்வொரு கவிஞர்களும் கண்ணாதசன் அண்ணாவை பற்றி விமர்சனம் செய்தது குறித்து அவரை கடுமையாக விமர்சித்து கவிதை பேசி வருகின்றனர். இதனால் கடுப்பான கண்ணதாசன் இனிமேல் இங்கிருந்தால் மோதலாகிவிடும் என்று நினைத்து கிளம்பி விடுகிறார். அங்கிருந்து அவர் கீழே இறங்கி நடக்கும்போது அனைவரும் இவரை சமாதானப்படுத்துகிறார்கள். அதன்பிறகு கண்ணதாசன் மீண்டும் தனது இருக்கையில் அமர்கிறார்.
அதன்பிறகு கவி பாட வந்த கவிஞர் புலமைபித்தன் மீண்டும் கண்ணதாசனை தனது கவிதைகள் மூலம் கடுமையாக விமர்சனம் செய்கிறார். ஆனாலும் இனிமேல் எழுந்து போக கூடாது என்ன தான் சொல்கிறார் என்று கேட்போம் என்று கூறி கண்ணதாசன் அங்கேயே அமர்கிறார். ஒரு கட்டத்தில் கடுமையாக வரிகளை கூறிய புலமைபித்தன், ‘’அறுக்கத்தான் வேண்டும் உன் நாவை எம் அண்ணாவை விமர்சித்த காரணத்தால்’’ என்று கவி பாடுகிறார்.
இந்த வரிகளை கேட்டு கோபமான கண்ணதாசன் இனிமேல் இங்கு இருக்க வேண்டாம் என்று கூறி இருக்கையில் இருந்து எழுந்திருக்கிறார். இதை பார்த்த புலமைபித்தன் ‘’இருந்தாலும் பொறுக்கத்தால் வேண்டும் உன்னை உன் பொன்னா செந்தமிழுக்காக’’ என்று பாடியதால் கண்ணதாசன் அப்படியே சாந்தமாகி தனது இருக்கையில் அமர்கிறார். இந்த வரிகளை கேட்டு அரங்கமே கைதட்டல் சத்தத்தால் அதிர்க்கிறது.
அடுத்து வந்த கவிக்கோ அப்துல் ரஹ்மான் தான் கண்ணதாசனை தாக்கி எழுதி வந்த கவிதை தொகுப்பை வாசிக்கிறார். இதை கேட்டு கண்ணதாசன் அமைதியாக இருக்கிறார். இந்த கவிதை வரிகளை முடிக்கும்போது அப்துல் ரஹ்மான் கண்ணதாசனே நீ யாரை போன்றவன், கடலில் இருந்து ஒரு வெப்பதால் புறப்பட்டாய், மேலும் கீழுமாய் எங்கெங்கோ அலைந்து திரிந்தாய்.,இருந்தாலும் இறுதியில் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்துவிட்டாய். என்று முடித்துவிட கவிரங்கும் முடிந்துவிடுகிறது.
வந்த அனைத்து கவிஞர்களும் கண்ணதாசனை விமர்சித்த நிலையில், கவிரங்கத்தின் முடிவில் கண்ணதாசன் என்ன சொல்லப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது, அனைவரும் என்னை விமர்சித்தனர். ஆனால் நான் விமர்சனத்தை பார்க்கவில்லை. அவர்களின் வார்த்தைகளைதான் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னை தாக்கி எழுதிய அத்தனை கவிதைகளில் அப்துல் ரஹ்மான் கவிதைகள் தான் எனக்கு மிகவும் பிடித்தது என்று சொல்கிறார்.
யாராவது என்னை விமர்சிக்க வேண்டும் என்றால் அப்துல் ரஹ்மான் போல் விமர்சியுங்கள். நான் ஏற்றுக்கொள்வேன். அதேபோல் அவரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் யார் இந்த கவிஞர் என்று பலரும் தேடி வருவார்கள் அப்துல் ரஹ்மானை கொண்டாடுங்கள் என்று சொல்லி அவரை புகழ்ந்து பேசுகிறார் கண்ணதாசன். அவரை விமர்சனம் செய்த அப்துல் ரஹ்மான் வெட்கத்தால் தலைகுணிந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“