தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – சரோஜா தேவி ஜோடிக்கு அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் சரோஜா தேவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் எம்.ஜி.ஆர் பேசாமல் இருந்திருந்தாலும் அவர் இக்கட்டான நிலையில், இருந்தபோது எம்.ஜி.ஆர் ஆறுதல் சொல்ல பெங்களூர் வரை சென்றுள்ளார்.
நாடக நடிகராக இருந்து பின்னர் சினிமாவில் சிறு சிறு வேடங்கில் நடித்து பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நாயகனாக உயர்ந்தவர் எம்.ஜி.ஆர். தனது படங்களில் நடிக்கும் பணியாற்றும் அத்தனை பேருக்கும் ஏதேனும் கஷ்டம் என்றால் உடனடியாக உதவும் மனப்பான்மை கொண்ட எம்.ஜி.ஆர், கருத்து வெறுபாடு காரணமாக பேசாமல் இருப்பவருக்கும் துன்பம் என்றால் முதல் ஆளாக சென்று நிற்பவர். அப்படி ஒரு சம்பவம் நடிகை சரோஜா தேவி வாழ்க்கையில் நடந்துள்ளது.
எம்.ஜி.ஆருடன் பல படங்களில் ஜோடியாக நடித்து நட்சத்திர நடிகையாக உயர்ந்தவர் சரோஜா தேவி. இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம் பெற்றால் தான் பிள்ளையா திரைப்படம். இந்த படம் நடிக்கும்போதே எம்.ஜி.ஆர் சரோஜ தேவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் கூட அவருடன் பேசாமல் இருந்த எம்.ஜி.ஆர் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் கூட இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சுவிடம் சொல்லித்தான் சொல்வாராம்.
அந்த அளவிற்கு அவர் மீது கோபமாக இருந்த எம்.ஜி.ஆர் 19 ஆண்டுகள் வாழ்ந்த கணவனை இழந்துவிட்டார் சரோஜா தேவி என்ற செய்தி தெரிந்தவுடன் முதல் ஆளாக தனது மனைவி ஜானகியுடன் பெங்களூர் சென்று அவரை சந்தித்துள்ளார். உங்கள் கணவர் இறந்தது நிச்சயமாக தாங்க முடியாத ஒரு சோகம், ஆனால் அதற்காக அந்த சோகத்திலெயே நீ மூழ்கிவிட கூடாது. அப்படி இருந்தால் உன் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
உனது மனநிலையை சீராக வைத்துக்கொள்ள பொதுவாழ்க்கைக்கு வந்தால் சரியாக இருக்கும். நீ சரி என்று சொனனால் நான் ராஜூகாந்தியிடம் பேசி உன்னை எம்.பி ஆக்க முயற்சி பண்றேன் என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். இதை கேட்ட சரோஜா தேவி, இப்போதைக்கு எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இந்த துயரத்தில் இருந்து நான் மீண்டு வருகிறேன். அதன்பிறகு அதை பற்றி யோசிக்கிறேன் என்று சரோஜா தேவி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“