க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக திரைப்படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து எம்.கே.ராதா, தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள என்.எஸ்.கிருஷ்ணன், தனது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு தேவையாக கருத்துக்களை வைத்து அசத்தியவர். கலைவாணர் என்ற பட்டத்துடன் வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், தனது நகைச்சுவையால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.
அதேபோல் நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாமல் தனது நடிகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த என்.எஸ்.கிருஷ்ணன், நகைச்சுவை காட்சிகள் 50 ஆண்டுகளை கடந்தும் இன்றும் மக்கள் ரசிக்கும் வகையில் உள்ளது. அதேபோல் எம்.ஜி.ஆரே தனது குருவாக என்.எஸ்.கிருஷ்ணனனை ஏற்றுக்கொண்டார்.
இதனிடையே 1938-ம் ஆண்டு வெளியான பக்த நாமதேவர் என்ற படத்தை திரௌபதி பாய் இயக்கி இருந்தார். ஸ்ரீனிவாசன், மாஸ்டர் கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் வெளியானபோது முதல் நாளில் தியேட்டரில் தயாரிப்பாளர் தவிர வேறு யாரும் படம் பார்க்க வரவில்லை. இதனால் தயாரிப்பாளர் மனமுடைந்த நிலையில், அடுத்த நாள் என்.எஸ்.கிருஷ்ணன் படம் பார்க்க சென்றுள்ளார்.
அப்போது தயாரிப்பாளரின் நிலையை உணர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன் படத்தில் நகைச்சுவை காட்சிகளை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி, அதற்காக அவரே காட்சிகளை எழுதி ஒரு இயக்குனரை வைத்து அந்த காட்சிகளை படமாக்கி பக்த நாமதேவர் படத்தில் சேர்த்துள்ளார். அன்பிறகு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.
இதன் மூலம் படத்திற்கு நல்ல வருவாய் கிடைத்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் வசூலில் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பணம் கொடுக்க வந்துள்ளார் ஆனால் சினிமாவை நம்பி வந்தவன் யாரும் கஷ்டப்படக்கூடாது இது உங்கள் பணம் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையுடன் கூறியுள்ளர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“