இசை உலகில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கொடி கட்டி பறந்த காலக்கட்டத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சங்கர் கணேஷ். 1967-ம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான மகராசி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து அக்கா தங்கை, காலம் வெல்லும், மன்னவன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இவர் 1972-ம் ஆண்டு வெளியான இதய வீனை என்ற படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்திற்கு முன்பே கணேஷை தனது மாப்பிள்ளை என்று அழைக்கும் எம்.ஜி.ஆர் இதயவீனை படத்தின் பேச்சுக்கள் தொடரும்போதே மாப்பிள்ளை இசையமைக்கட்டும் என்று கூறியுள்ளார். அதற்கு முன்பு சிறு பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து வந்த சங்கர் கணேஷ் இருவரும் முதல் முறையாக எம்.ஜி.ஆர் படத்திற்கு இசையமைத்தனர். இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங்கின்போது படக்குழுவில் இருந்த அனைவரும் இது எம்.ஜி.ஆர் படம் பார்த்து பண்ணுங்க என்று சொல்லிக்கோண்டே இருந்துள்ளனர்.
அனைவரும் அழுத்தம் கொடுப்பதை பார்த்த சங்கர் கணேஷ் இருவரும் 105 டியூன்களை தயார் செய்து வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் பாடல் கம்போசிங் எப்படி இருக்கிறது என்று கவனிக்க வந்த எம்.ஜி.ஆர் என்ன டியூன் போட்ருக்கீங்க வாசிங்க பார்ப்போம் என்று கூறியுள்ளார். சங்கர் கணேஷ் இருவரும் 105 டியூன்களையும் வாசித்துள்ளனர். அனைத்து டியூன்களையும் கேட்ட எம்.ஜி.ஆர் இதில் 5-வது டியூனை வாசி என்று கூறியுள்ளார். அதை வாசித்து முடித்தவுடன் அடுத்து 15-வது மற்றும் 25-வது டியூன் என் அடுத்தடுத்து வாசிக்க கூறியுள்ளார்.
சங்கர் கணேஷ் இருவரும் எம்.ஜி.ஆர் சொல்ல சொல்ல வாசித்ததை தொடர்ந்து இந்த 3 டியூனையும் ஒன்றாக வாசியுங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். இதை கேட்ட சங்கர் இது வேற ராகம் அது வேற ராகம் ஒன்றாக பாட வாசிக்க முடியாது என்று சொல்ல, டியூன் யார் போட்டா என்று எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். அதற்கு இருவரும் நாங்கள் தான் போட்டோம் என்று சொல்ல, அப்போது 3-ம் சேர்த்து நீங்கள் தான் வாசிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.
இதை கேட்ட கணேஷ் சங்கரிடம் நீ 5-வது டியூனை வாசி நீ முடித்தவுடன் நான் 15-வது டியூனை வாசிக்கிறேன். நான் முடித்தவுடன் நீ 25-வது டியூனை வாசி என்று சொல்லி அதன்படி வாசித்துள்ளனர். இதை கேட்ட எம்.ஜி.ஆர் டியூன் ஓகே என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். அப்படி ஒருவான பாடல் தான் ‘’பொன் அந்தி மாலை பொழுது’’ என்ற பாடல். இந்த பாடலை கேட்ட எம்.ஜி.ஆர் சங்கர் கணேஷ் இருவரையும் பாராட்டியுள்ளார். இதை கணேஷ் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“