தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் உச்சம் தொட்ட நடிகர்களில் முக்கியமானவராக இருக்கும் சிவாஜி கணேசனை படப்பிடிப்பு தளத்தில் சக நடிகை ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு பின் 3 நாட்கள் சிவாஜி கணேசன் காய்ச்சலால் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பால் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் தான் சிவாஜி கணேசன். அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களின் நடிப்பை பார்த்து வியந்து பாராட்டுவதும், அவர்கள் சரியாக நடிக்கவில்லை என்றால் நடிப்பு சொல்லிக்கொடுப்பதும், இயக்குனர்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் சிறப்பான நடிப்பை வழங்குவதும் சிவாஜியின் குணாதிசயங்கள்.
முன்னணி நடிகைகள் பலருடன் இணைந்து நடித்துள்ள சிவாஜி, நாட்டிய பேரொலி என்று அழைக்கப்படும் பத்மினியுடன் இணைந்து 60-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் தான் எதிர்பாராதது. 1954-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிவாஜி, பத்மினி, அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் பத்மினி சிவாஜி இருவரும் காதலித்து வரும் நிலையில் வெளிநாட்டிற்கு படிக்க போகும் சிவாஜி, எதிர்பாராத விதமாக விமான விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. இதனிடையே சிவாஜியின் அப்பாவை பத்மினி திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டு, திருமணமும் முடிந்துவிடுகிறது. விமான விபத்தில் சிக்கிய சிவாஜி கண்பார்வையை இழந்து பத்மினியின் வீட்டில் தஞ்சமடைகிறார்.
தனது அப்பாவின் மனைவி என்று தெரியாத சிவாஜி பத்மினிக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதால் அவளுடைய நண்பனாக அந்த வீட்டில் இருக்கிறார். அப்போது ஒருநாள் பத்மினி கையை பிடித்து சிவாஜி பழைய நினைப்பில் நடந்துகொள்ள பத்மினி அவரை ஓங்கி அடித்துவிடுவார். இந்த காட்சி படமாக்கப்படும்போது சிவாஜியை அடிக்க பத்மினி தயங்கியுள்ளார். ஆனாலும் பரவாயில்லை நடிப்புதானே தைரியமாக பண்ணுங்க என்று சிவாஜி கூறியுள்ளார்.
அதை ஏற்றுக்கொண்ட பத்மினி படப்பிடிப்பு தொடங்கியவுடன் சிவாஜியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதை இவ்வளர் பலமாக அறைவிடும் என்று எதிர்பார்த்திராத சிவாஜிக்கு அன்றில் இருந்து 3 நாட்கள் காய்ச்சல் வந்துவிட்டது. அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுத்திருப்பதாக செய்தி கிடைத்ததும், நம்மால் தானே இப்படி ஆகிவிட்டது என்று யோசித்த உடனடியாக அவரை சென்று பார்த்து, மருத்துவ செலவை ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் சிவாஜிக்காக ஒரு காரை வாங்கி பரிசாகவும் அளித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திற்கு நடிக்க சென்றபோது, பத்மினி என்னை அறைவது போல் ஒரு காட்சி வையுங்கள். அப்படியே எனக்கும் ஒரு கார் வாங்கி கொடுத்துவிடுங்கள் என்று எம்.ஜி.ஆர் பத்மினியை கிண்டல் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.