தனது இளம் வயதிலே பல க்ளாசிக் பாடல்களை கொடுத்து இளம் வயதிலேயே மறைந்து போன பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் நடிகர் திலகம் சிவாஜியின் படத்திற்கு பாடல் எழுத மறுத்த சம்பவமும் நடந்துள்ளது.
Advertisment
இன்றைய காலக்கட்ட இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய கவிஞர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார். 1930-ம் ஆண்டு பிறந்த இவர் தனது 29-வது வயதில் மரணமடைந்தார். ஆனாலும் தான் சினிமாவில் கால் பதித்த நாளில் இருந்து மரணத்தை தழுவுவது வரை தமிழ் சினிமாவின் பாடல்களில் தனது தனித்துவத்தை புகுத்தி வரவேற்பை பெற்றவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
இலக்கிய நடையில் பாடல்கள் ஒளித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து பாடல் எழுதிய பட்டுக்கோட்டையார், 1960-ம் ஆண்டு வெளியான சிவாஜியின் இரும்புத்திரை படத்திற்கு பாடல் எழுத மறுத்துள்ளார். ஜெமினி நிறுவனத்தின் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் அவரே இயக்கிய படம் இரும்புத்திரை. சிவாஜி, சரோஜா தேவி, வைஜெயந்திமாலா ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் மொத்தம் 10 பாடல்கள் இடம் பெற்றது. இந்த படம் தொழிலாளர்கள் சம்மந்தப்பட்ட கதை என்பதால் இயக்குனர் எஸ்.எஸ்.வாசன், அப்போது வளர்ந்து வரும் கவிஞராக இருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை பாடல் எழுத வைக்கலாம் என்று யோசித்து, தனது உதவியளரை அவரிடம் பேசிவிட்டு வரும்படி அனுப்பியுள்ளார். அவர் பட்டுக்கோட்டையாரை கேட்டபோது, பட்டுக்கோட்டை பாடல் எழுத மறுத்துவிட்டார்.
Advertisment
Advertisements
ஆனாலும், அவரை விட மனமில்லாத எஸ்.எஸ்.வாசன், தனது அலுவலகத்தில் மாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் கவிஞர் கொத்தமங்கலம் சுப்புவை அனுப்புகிறார். அவர் போய் கேட்டபோதும் பட்டுக்கோட்டை பாடல் எழுத முடியாது என்று மறுத்துள்ளார். இது குறித்து கொத்தமங்கலம் சுப்பு காரணம் கேட்டபோது, நீங்கள் என்னை விட பெரிய கவிஞர் உங்களை விட்டுவிட்டு என்னை எழுத சொன்னால் எப்படி, நான் உங்கள் பொழப்பை கெடுக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட, கொத்தமங்கலம் சுப்பு, தம்பி நான் அங்கே மாத சம்பளத்திற்காக வேலை செய்கிறேன். நான் பாடல் எழுதினாலும் இல்லை என்றாலும் எனக்கு சம்பளம் உண்டு. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை. நீங்கள் வளர்ந்து வரும் கவிஞர் இந்த படத்திற்கு நீங்கள் பாடல் எழுத வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு பாடல் எழுத ஒப்புக் கொண்ட பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அந்த படத்தில் 3 பாடல்களை எழுதியிருந்தார். இதில் கையில் வாங்கினேன் பையில் போடல என்ற பாடல் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற தத்துவ பாடலாக அமைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“