க்ளாசிக் தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என முன்னணி நடிகர்கள் தொடங்கி ஒரு சில படங்களில் காணாமல் போன நடிகர்கர்கள் வரை அனைவருமே நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் தான். சினிமா வளர்ச்சியடைந்து வந்த காலக்கட்டத்தில் நாடகத்தில் இருந்த பலரும் சினிமா வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்தனர். அதேபோல் நடிப்பின் மீது ஆர்வத்தில் இருந்த பலரும் நாடகத்தில் வாய்ப்பு தேடிய நிகழ்வுகளும் அப்போது நடந்துள்ளது.
அந்த வகையில் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்து நாயகன் வில்லன் என பலதரப்பட்ட கேரக்டரில் நடித்து முத்திரை பதித்தவர் தான் நடிகர் ஆர்,எஸ்.மனோகர். லக்ஷ்மி நரசிம்மன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், மனோகரா நாடகத்தில் சிறப்பாக நடித்ததன் காரணமாக இவரின் பெயரே மனோகர் என்று மாறியது. நாடகங்களில் நடித்துக்கொண்டே அரசு வேலையில் பணியாற்றி வந்துள்ளார் மனோகர்.
நாடகத்தில் இவரது நடிப்புக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்துள்ளனர். மேலும் சரித்திர நாடகங்கள் மட்டுமல்லாமல் சமூக நாடகங்களிலும் நடித்து வந்துள்ளார். அப்போது ஒருநாள் மனோகர் நாடகத்தில் கோட் சூட் போட்டு நடித்துள்ளார். அந்த நாடகத்தை பார்க்க வந்த தயாரிப்பாளர் வி.சி.சுப்புராமன், மனோகரின் நடிப்புத்திறமையை பார்த்து நீ சினிமாவில் ஹீரோவாக நடிக்க வா என்று அழைத்துள்ளார்.
அப்போது அரசு வேலையில் இருந்ததால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத மனோகர் இது குறித்து தன் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். எனக்கு இப்போது சினிமா வாய்ப்பு வந்திருக்கிறது நான் என்ன செய்ய என்று கேட்க, உனக்கு இப்போது நாடகத்தில் நல்ல ஆர்வம் இருக்கிறது. நடிப்பில் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது. அதனால் நீ சினிமாவில் நடித்தால் பெரும் புகழ் கிடைக்கும் நீ நடி என்று அவரது அம்மா சொல்லியிருக்கிறார்.
அம்மா சொன்னவுடன் தனது அரசு வேலையை விட்ட மனோகர் 1951-ம் ஆண்டு வெளியான ராஜாம்பாள் என்ற படத்தின் மூலம் நாயகனாக திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து ஒருசில படங்களில் நாயகனாக நடித்த மனோகர் அதன்பிறகு கேரக்டர் நடிகராகவும் வில்லன் நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். இதில் 1952-ல் வெளியான தாய் உள்ளம் என்ற படத்தில் ஆர்,எஸ்.மனோகர் நாயகனாக நடிக்க அவருக்கு வில்லனாக ஜெமினி கணேசன் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 1962-ம் ஆண்டு வெளியாக கொஞ்சும் சலங்கை என்ற படத்தில் ஜெமினி கணேசன் நாயகனாக நடிக்க அந்த படத்தில் வில்லனாக ஆர்.எஸ்.மனோகர் நடித்திருந்தார். அடிமைப்பெண், நான் ஆணையிட்டால் என பல படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்துள்ள ஆர்.எஸ்.மனோகர், பில்லா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார். அதேபோல் 1987-ம் ஆண்டு பாண்டியராஜன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான மனைவி ரெடி படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“