கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகப் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் லட்சுமி நாராயணா – நமோ நமஹ என்ற ஆன்மீகப் புராண தொடரின் இந்த வார எபிசோட்டில் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நாராயணரை பழிவாங்கும் நடவடிக்கையை சமுத்திரராஜன் தொடர்ந்து செய்கிறான். லட்சுமியின் நிழலில் இருந்து படைத்த அலட்சுமி உலகில் செழிப்புக்கு எதிராக தரித்திரத்தை பரவச் செய்து, மக்களையும் தேவர்களையும் கொடுமை செய்கிறாள். ஒருநிலையில் மக்களையும் தேவர்களையும் காக்கும் நாராயணரையே நேருக்கு நேராக நின்று எதிர்க்கிறாள். நாராயணர் அலட்சுமியின் சொரூபத்தை அழித்து விமோச்சனம் செய்து எல்லோரையும் காத்தருள்கிறார்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் சமுத்திரராஜனின் எதிர்ப்பையும் மீறி பாற்கடல் கடையப்படுகிறது. அதிலிருந்து அமிர்தம் உண்டாகிறது. அமிர்தத்திற்கு தேவர்களும் அசுரர்களும் போட்டி போட்டு அடித்துக் கொள்கிறார்கள். அசுரமாதா திதி அமிர்தம் அசுரர்களுக்கே என்று நாராயணரிடம் வாக்குவாதம் செய்கிறாள். நாராயணர் அமிர்தத்தை காக்கும் ரூபமாக மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியாக தங்கள் முன் தோன்றியிருப்பது நாராயணர் என தெரியாமல் அசுரர்கள் மோகினியிடம் மயங்குகிறார்கள்.
இறுதியில் மோகினி மிகச்சாதுர்யமாக அசுர தலைவர்களிடம் பேசி அமிர்தக் கலையத்தைக் கைப்பற்றுகிறாள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சரிசமமாக பகிர்ந்து கொடுப்பதாகச் சொல்லி சமாதானப்படுத்துகிறாள். இப்படி அசுரர்களின் பேராசையை பயன்படுத்தி நாராயணர் புரியும் லீலைகளை லட்சுமி கண்டு சந்தோஷப்படுகிறார். மோகினி அமிர்தத்தை முதலில் தேவர்களுக்கு பருகக் கொடுக்கிறாள். தேவர்கள் பருகி முடிக்கும்போது அமிர்தம் தீர்ந்து போய்விட்டதுபோல் மோகினி நாடகம் ஆடுவாள் என அசுரர்களில் சொர்ணபானு உணர்கிறான்.
மேலும் மோகினியின் சாதுர்யத்தை கண்டு பிடித்தும் விடுகிறான். தானே தேவர்போல் மாறுவேடமிட்டு அமிர்தம் பருகும் தேவர்களிடையே நின்று கொள்கிறான். மோகினி அமிர்தத்தை சொர்னபானுவிற்கு பருக வழங்குகிறாள். சொர்னபானு அமிர்தம் பருகும்போதுதான் அது தேவர் இல்லை அசுரன் என தெரியவருகிறது. அசுரன் சொர்னபானு அமிர்தத்தை பருகி சாகாவரம் பெற்றவனாகிறான். சூரியரும் சந்திரரும் சொர்னபானு மாறுவேடத்தில் வந்துள்ளதை தாமதமாக கண்டுணர்ந்து கண்டிக்கின்றனர். சொர்னபானு சூரியரையும் சந்திரரையும் விழுங்க முயல்கிறான்.
சூரியர் சந்திரர் தன் மமதையினால் சொர்னபானு திருட்டுத்தனமாக தேவரோடு வந்து நின்றதைக் கண்டுணர தவறிவிட்டனர் என எல்லோரும்போல் நாராயணரும் நினைக்கிறார். சொர்னபானு விழுங்க முயலும்போது தடுக்காமல் விடுகிறார். பின் சொர்னபானுவின் தலையை கொய்து விடுகிறார். இராகு கேதுவாக மாற்றி நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக வலம் வந்து அருள் புரிய செய்கிறார். இதனை தொடர்ந்து நாரதர் பூலோகத்தில் மக்கள் மிகுந்த வேதனையுடன் காலம் கழிப்பதைக் கண்டு பிடிக்கிறார். இச்செய்தியை நாராயணர் மற்றும் லட்சுமியிடம் தெரிவிக்கிறார்.
உடனே நாராயணரும் லட்சுமியும் மாறுவேடமிட்டு பூலோகம் வருகிறார்கள். கஷ்டப்படும் மக்களை சந்தித்து சத்யநாரயணப் பூஜை செய்து சுபிட்சம் பெறுங்கள் என்று உணர்த்துகின்றனர். தேவலோகத்தில் சுக்கிராச்சாரியாருக்கும் பிரகஸ்பதிக்கும் கருத்து வேறுபாட்டால் யார் பெரியவர் என்கிற மோதல் ஏற்படுகிறது. இருவரும் நேருக்கு நேராக யுத்தம் செய்து கொள்கிறார்கள்.
இதனை நாராயணர் தன் ஞான திருஷ்டியினால் கண்டுணர்ந்து லட்சுமியுடன் ஆயுதம் தாங்கி, தேவலோகத்திற்கு வருகை புரிகிறார்.
சுக்கிராச்சாரியரையும் பிரகஸ்பதியையும் யுத்தத்தை நிறுத்தச் சொல்லி கண்டிக்கிறார். பிரகஸ்பதி நாராயணரும் லட்சுமியும் சொல்வதை கேட்டுக் கொள்கிறார். ஆனால் சுக்கிராச்சாரியார் நாராயணரையே எதிர்க்கிறார். லட்சுமியும் தேவர்களும் அதிர்ச்சி அடைகின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.