காதல் அனைத்தையும் வெல்லும். ஆனால் ஒரு சூனியக்காரியின் சூழ்ச்சியை வெல்லுமா? கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் புதிய தொடரான “மோகினி ஆட்டம் ஆரம்பம்” வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த புதிய கற்பனைக் கதை நிஷாந்தி (நியா ஷர்மா) என்ற தீய மந்திரக்காரியின் சூழ்ச்சிகளுக்கு எதிராக, தமக்கு நெருக்கமானோரை காக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது.
நிஷாந்தி, "சோலா ஷ்ரிங்கார்" எனப்படும் 16 அதிசய ஆபரணங்களைத் தேடி, நிரந்தர அழகையும் இளமையையும் பெற முயற்சிக்கிறாள். 16 ஆபரணங்களை அடைய, ஒவ்வொரு கணவரையும் யாகத்திற்கு பலி கொடுக்கிறாள். அதனால் அவளது தீய சக்திகள் மேலும் வலுபெறுகின்றன.
இப்போது, அவள் தனது 16வது குறியாக மோகனை (செய்ன் இபாத் கான்) இலக்காகக்கொண்டு, இறுதி ஆபரணத்தை பெற திட்டமிடுகிறாள். ஆனால் நிஷாந்திக்கு எதிராக தியா (டெப்சந்திரிமா சிங் ராய்) எனும் துணிச்சலான பெண் மோகனை காப்பாற்ற முன்வருகிறாள். மோகனும் தியாவும் சிறுவயது நண்பர்கள், காதலர்கள். மேலும் மோகன் தனது படிப்பை முடித்து வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் அவர்கள் திருமணம் செய்யத் தீர்மானிக்கின்றனர்.
நிஷாந்தியின் கொடிய சூழ்ச்சிகளிலிருந்து மோகனை காப்பாற்ற முயற்சிக்கும் தியாவின் போராட்டமே “மோகினி ஆட்டம் ஆரம்பம்” தொடரின் மையக் கதையாக மாறுகிறது. இவை அனைத்தையும் விறுவிறுப்போடும், திடீர் திருப்பங்களோடும் சுவாரசியமாக சொல்லும் கதைதான் “மோகினி ஆட்டம் ஆரம்பம்”. மாய மோகினியின் காதல் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“