கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிவசக்தி திருவிளையாடல். சுவாரஸ்யமான திரைக்கதையோடு, கடந்த ஜூன் மாதம் முதல் வாரம் முதல் ஒளிப்பரப்பாகி வரும் இந்தத் தொடர், ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று வெற்றிகரமான தொடராக ஒளிப்பாகி வருகிறது.
பிரஜாபதி தட்சண் செய்த தவப் பயனால் தாட்சாயிணி சதி என்கிற பெயரில்,
அவருக்கு மகளாக அவதரிக்கிறாள் ஆதிபராசக்தி. சிவன் மீது காதல் கொள்ளும் சதி, பிரஜாபதி தட்சண் தடைகளை தகர்த்தெரிந்து சிவனைக் கரம் பிடிக்கிறார். ஆனால், தட்சண் செய்யும் ஒரு யாகம் மூலம் தாட்சாயிணி வாழ்விலும் சிவன் வாழ்விலும் ஆறாத துயரம் நிகழ்கிறது. சதி தன் உடலை அக்னிக்கு இரையாக்குகிறார். இதனால் கோபம் அடையும் சிவன் வீரபத்ரராக உருவெடுத்து பிரஜாபதி தட்சனின் ஆனவத்தை அடக்கி அவர் தலையினைக் கொய்கிறார்.
கோபம் அடங்காத சிவன் இவ்வுலகினையே அழிக்கும் அளவுக்குச் செல்கிறார். அதனை நாராயணர் தடுக்கிறார். ஆனாலும் கோபம் அடங்காத சிவன் ஆழ்ந்த தவத்திற்குள் மூழ்குகிறார். இப்பூவுலகின் சுழற்சிக்கு சிவன் – சக்தியின் சேர்க்கை தேவை என்பதை உணர்ந்த நாராயணர், பிரம்மன் மற்றும் தேவர்கள் சக்தியை வேண்ட, சக்தி பார்வதியாக உருவெடுக்கிறார். இமயமலை அரசன் ஹிம்மான் - மைனாதேவி தம்பதிக்கு மகளாக பிறக்கிறார். சிவனின் மீது இளம் வயது முதலே பக்திகொண்டு வளர்கிறாள்.
திருமண வயதை அடையும் பார்வதி திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள். ஆனால் சிவனின் தவம் அதற்கு பெரும் தடையாக இருக்கிறது. நாராயணர் ஏற்பாட்டில் மன்மதனும் ரதியும் சிவனின் தவத்தினைக் கலைக்கிறார்கள். தவம் கலைந்ததில் கோபம் அடையும் சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனை எரித்துவிடுகிறார். காதல் கணவனை இழந்த ரதி கோபத்தில் பார்வதியை நோக்கி ”உனக்காகத்தான் சிவனின் தவத்தினைக் கலைத்தோம். அதனால் தான் இப்போது மன்மதனை இழந்து நிற்கிறேன். இந்த பாவம் உன்னைச் சும்மா விடாது. உனக்கும் சிவனுக்கு திருமணம் நடந்தாலும் உனக்கு குழந்தை பாக்யம் கிடைக்காது” என்று சபித்துவிடுகிறார்.
ஒரு புறம் சிவன் மீதான காதல், மறுபுறம் ரதியின் சாபம், பார்வதி கலங்கிப் போகிறார். சதியின் மறைவை மறக்க முடியாமல் தவிக்கும் சிவனை – பார்வதியோடு சேர்த்துவைக்க நாராயணரும் மற்ற தேவர்களும் படாத பாடு படுகிறார்கள். அதே நேரத்தில் அரக்க உலகத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தால் அரக்கர்களுக்கு நல்லதல்ல, எனவே இதைத் தடுக்க வேண்டும் என்று தாரகாசுரன் சுக்ராச்சாரியாரின் உதவியுடன் பல சதித்திட்டங்களை நிறைவேற்றுகிறான்.
ஒரு கட்டத்தில் மனம் மாறும் சிவன் பார்வதி தான் ஆதிபராசக்தி என்பதை உணர வேண்டும் என்பதற்காக பல சோதனைகளைத் தருகிறார். அரக்கன் தாரகாசுரனின் சதிகளைத் தகர்த்து, கடும் தவம் செய்து பார்வதி சிவனின் மனதில் இடம் பிடிக்கிறார். ஆனால் பார்வதியின் தாய் மைனாதேவி சிவனுக்கு பார்வதியைத் திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார். ”ரதியின் சாபத்தினால் சிவனுக்கும் பார்வதிக்கு திருமணம் நடந்தால், பார்வதிக்கு குழந்தை பாக்யம் கிடைக்காது. அப்படியிருக்கும் போது ஒரு தாயாக பார்வதியை சிவனுக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது” என்று தன் வாதத்தை முன்வைக்கிறார்.
நாராயணர் மற்றும் தேவர்களால் மைனாதேவியின் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். வரும் வாரத்தில் சிவன் பார்வதியை என்ன திருவிளையாடல்கள் செய்து திருமணம் முடிக்கிறார் என்பதுதானாம். சிவன் - பார்வதி ஒன்று சேர்வர்களா? திருமணம் நடக்குமா? அரக்கன் தாரகாசுரன் என்ன சதி செய்யப் போகிறான்? என இவை அனைத்தையும் விறுவிறுப்போடும், திகீர் திருப்பங்களோடும் சுவாரஸ்யமாக சிவசக்தி திருவிளையாடல் தொடர் கவனம் ஈர்த்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.