காமெடி கிங் கவுண்டமணி, சிறகடிக்க ஆசை சீரியல் நடிகரை அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்து அந்த நடிகரே நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் முன்னணியில் இருக்கும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் ப்ரைம்டைம் சீரியலான இதில், வெற்றி வசந்த், கோமதி பிரியா, ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் நடிகரும் இயக்குனருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வரும் சிறகடிக்க ஆசை சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இந்த சீரியலில் நாயகனின் நண்பர் கேரக்டரில் நடித்து வருபவர் பழனியப்பன். விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 50-க்கு மேற்பட்ட சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பழனியப்பன், அவ்வப்போது சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து முக்கிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவரை நடிகரும் காமெடி லெஜண்டுமான கவுண்டமணி பாராட்டியுள்ளார்.
சீரியலில் நடித்துக்கொண்டே திரைப்படங்களில் நடித்து வரும் பழனியப்பன் தற்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்து வருகிறார். சில வருட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில், ஒரு பெரிய வசனத்தை பழனியப்பன் ஒரே டேக்கில் பேசி நடித்துள்ளார். இதை பார்த்த கவுண்டமணி, பழனியப்பனை அழைத்து எனது திறமைக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என பாராட்டியுள்ளார்.
சினிமா வாய்ப்பு தேடி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த பழனியப்பன், தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். தற்போது இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“