மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த பிரித்வி ராஜூன் ஆடுஜீவிதம் படத்திற்கு இசையமைத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகின் தலைசிறந்த விருதான ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது உலகம் போற்றும் முக்கின இசை கலைஞராக உருவெடுத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். தமிழ் மலையாளம், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், அரபி ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழி படங்களுக்கும் இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், இசை தொடர்பான படங்களை தயாரித்தும் வருகிறார்.
தனது முதல் படமான ரோஜா படத்திற்கு தேசிய விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்லாம்டாக் மில்லியனர் படத்திற்காக சினிமா துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாக இருக்கும் ஆஸ்கார் விருதை வென்று அசத்தினார். அந்த வகையில் தற்போது ஆடு ஜீவிதம் படத்திற்காக உலக சினிமாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக ஹாலிவுட் மியூசிக் மீடியா விருதை வென்றுள்ளார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் ரஹ்மானுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
ஆடு ஜீவிதம் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனதுர் பிளஸி இயக்கத்தில் வெளியான படம் ஆடு ஜீவிதம். பிரித்வி ராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், வெளிநாட்டு வேலைக்காக சென்று ஏமாற்றப்பட்ட ஒருவரின் உண்மையான வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான ஆடு ஜீவிதம் படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், உள்ளிட்ட 9 பிரிவுகளில் கேரளா மாநில அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்கு இசையமைத்த ஏ,ஆர்.ரஹ்மானுக்கு ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த 'பெரியோனே' என்கிற பாடல், சிறந்த பாடல் பிரிவில் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான இசை என்கிற பிரிவில் பின்னணி இசைக்காகவும் நாமினேட் செய்யப்பட்டது. இதில் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் இயக்குநர் பிளஸ்சி விருதை பெற்றுக் கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“