மேடையில் பாடியபோது ஒரு வார்த்தை தவறாக உச்சரித்த பாடகி ஸ்ரோயா கோஷலை இளையராஜா மேடையில் வைத்து அவமானப்படுத்தி தரம் தாழ்ந்துவிட்டார் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இசைஞானி என்று அனைவராலும் பாராட்டப்படும் இவர், இந்திய சினிமாவில் தனது இசையால் பல வெற்றிப்படங்களையும் பாடல்களையும் கொடுத்துள்ளார். இப்படி பல புகழ் பெற்றிருந்தாலும் அவ்வப்போது தனது கருத்துக்கள் மற்றும் செயல்களால் கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் இளையராஜா தலைகணம் பிடித்தவர், ஆணவம் பிடித்தவர் என்று கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இளைராஜா குறித்து தனது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா நடத்திய இசை கச்சேரியில், ரஜினியின் ஜானி படத்தில் இடம்பெற்ற காற்றே எந்தன் கீதம் பாடலை பிரபல பாடகியாக ஸ்ரேயா கோஷல் பாடியிருந்தார். இந்த பாடலில் காணாத ஒன்றை தேடுதே என்பதற்க்கு பதிலாக தோடுதே என்று ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.
அப்போது அவரை கிண்டல் செய்யும் விதமாக திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று இளையராஜா மேடையிலேயே தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள ஜேம்ஸ் வசந்தன், 15 வருடங்களுக்கு முன்பு இளையராஜா இசை கச்சேரி நடைபெற்றபோது நான் முன்வரிசையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஸ்ரேயா கோஷல் காற்றில் எந்தன் கீதம் பாடலை பாடினார்.
அந்த பாடலில் காணாத ஒன்றை தேடுதே என்பதற்கு பதிலாக அவர் தோடுதே என்று பாடிவிட்டார். ரசிகர்கள் பலரும் இதை கேட்டு சிரிக்கிறார்கள். இதை பார்த்த ராஜா சாரும் தலையில் அடித்துக்கொண்டு சிரிக்கிறார். ஆனாலும் அடுத்து பாடும்போதும் ஸ்ரேயா கோஷல் அப்படியே பாடுகிறார். அப்போது ராஜா சார் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று மைக்கில் சொல்கிறார். இதை கேட்டு எல்லாரும் கைத்தட்டி பாராட்டுகிறார்கள். எவ்வளவு பெரிய மனிதாபிமான கொலை இது. ஸ்ரேயா கோஷல் ஒரு பெங்காளி. இந்தி பாடலை பாடுபவர்.
ஏன் அவரை கூட்டி வந்து தமிழில் பாட வைக்க வேண்டும். இங்கிருக்கும் ஜானகி, வாணி ஜெயராம், பி.சுசிலா ஆகியோரை விட அவர் சிறப்பாக பாடுவார் என்று தானே அழைத்து வந்தீங்க. அப்போ காணாத ஒன்றை தோடுதே என்று பாடினால் அது யாருடைய தவறு. அவர் தமிழ் பாடலை இந்தியில் எழுதி தான் பாடிக்கொண்டிருக்கிறார். அதை நீங்கள் அப்போதே திருத்தியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, மேடையில் மொழித் தெரியாமல் பாடுபவர் தவறு செய்தால், அதை நீங்கள் தமிழில் கிண்டல் செய்யலாமா?
நீங்கள் சுட்டிக்காட்டுவது அவருக்கும் தெரிய வேண்டும் அல்லவா அதனால் ஆங்கிலத்தில் தவறை சுட்டிக்காட்டியிருக்கலாம். ஆனால் மொழி தெரியாத அவரை தமிழில் பேசி கிண்டல் செய்யும் அளவுக்கு அநாகரிக்கமாக நடந்துகொண்டார் இளையராஜா. இதனால் மக்கள் பலரின் மனதில் அவர் தரம் தாழ்ந்துவிட்டார் என்று ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“