தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இருந்த ஜி. மாரிமுத்து இன்று திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1966-ம் ஆண்டு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் பிறந்த ஜி. மாரிமுத்து சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்துள்ளார். ஆனால் சினிமாவில் அவருக்கு சரியாக வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஹோட்டலில் சர்வராக பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து இலக்கியத்தின் மீது உண்டாக ஆர்வம் காரணமாக கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக சேர்ந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ராஜ்கரனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சினிமாவை கற்றுக்கொண்ட மாரிமுத்து கடந்த 1994-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு 2008-ம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரிமுத்து 2014-ம் ஆண்டு வெளியான புலிவால் படத்தையும் இயக்கி இருந்தார்.
இயக்கம் மட்டுமல்லாமல் நடிகதராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட மாரிமுத்து, ஆசை, உதயா, பரியேறும் பெருமாள், கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படததில் வில்லன் வர்மாவின் வலது கையாக நடித்திருந்த மாரிமுத்து சின்னத்திரையில், எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார்.
பெரிய திரையில் கிடைக்காத வரவேற்பு அவருக்கு சின்னத்திரையில் கிடைத்தது என்று சொல்லலாம். பொதுவாக தமிழ் சினிமாவில் மீம்ஸ் மெட்டீரியலாக வலம் வந்துகொண்டிருப்பவர் வடிவேலு. அவருக்கு பின் மீம்ஸ் மன்னனாக ஜொலித்தவர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியலில், ஏய் இந்தம்மா என்ற பேசும் ஒரு வசனமே அவருக்கு அடையாளமாக அமைந்தது என்று கூட சொல்லலாம்.
தேசிய பெண்கள் தினம் வந்தபோது அவரின் படத்தை வைத்து ஏய் இந்தாம்மா ஹேப்பி உமன்ஸ்டே என்று பதிவிட்டிருந்தனர். அதேபோல், அவ்வப்போது நடைபெறும் சம்பவங்களை மாரிமுத்து தனது ஸ்டைலில் சொன்னால் எப்படி இருக்கும் என்பது போன்ற மீம்ஸ்கள் இணையத்தில் வெளியாக தொடங்கினர். இதில் சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாரிமுத்து ஜோசியர்களுடன் ஆக்ரோஷமாக பேசிய காட்சிகள் இணையத்தில் படுவைரலாக பரவி வந்தது.
இதனிடையே எதிர்நீச்சல் டப்பிங் பணியில் இருந்த மாரிமுத்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். அவரது திடீர் மரணத்தை எதிர்பராத நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், சென்னை சூர்யா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாரிமுத்துவின் உடல் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“