தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்து இன்றைய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய், நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக இயக்குனர் சேரன் தற்போது வருத்தப்பட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் எல்லா காலத்திலும் போற்றப்படும் படங்களை கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் சேரன். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக இருந்த இவர், கடந்த 1997-ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சாதிய கொடுமையின் பிரச்சனைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தொடர்ந்து பொற்காலம், வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சேரன், 2002-ம் ஆண்டு வெளியான சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். கதையின் நாயகனாக பல படங்களில் நடித்துள்ள சேரன், தான் இயக்கிய படங்களிலும் ஹீரோவாக நடித்திருந்தார். அதில் ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல படங்களில் நடித்து இயக்கி இருந்தார்.
இவரது இயக்கத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்த நிலையில், இவர் ஆட்டோகிராஃப் படத்தை முடித்த பிறகு தளபதி விஜய் அழைத்து கதை கேட்டுள்ளார். பொதுவாக தான் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, அடுத்த படத்திற்கான கதையை கேட்கும் வழக்கத்தை வைத்துள்ளார். விஜய்.
அப்போது முன்னணியில் இருக்கும் இயக்குனர்களிடம் கதை கேட்டு, அதில் இருந்து சிறந்த ஒரு கதையை தேர்வு செய்வது விஜயின் வழக்கம். அந்த வகையில் சேரனை அழைத்து கதை கேட்ட விஜய்க்கு சேரன் சொன்ன கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அப்போது சேரன் தவமாய் தவமிருந்து படத்தை இயக்கி வந்ததால், அந்த படத்தின் ஷூட்டிங் முடிய தாமதமாகியுள்ளது. இதனால் விஜயயிடம் சென்று, இப்போது படத்தை தொடங்க முடியாது என்று சொல்ல, விஜய் அடுத்த படத்தை வேறு இயக்குனரை வைத்து தொடங்கியுள்ளார்.
இது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ள சேரன், அப்போது விஜய் படத்தை மிஸ் செய்துவிட்டேன். அந்த படத்தை இயக்கியிருந்தால் இப்போது நான் வேறு உயரத்தில் இருந்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“