வடிவேலு உதயநிதி நடிப்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த நடிகை கீதா கைலாசம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள மாமன்னன் படத்தில் வடிவேலு உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஜூன் 29-ந் தேதி வெளியான இந்த படத்தில் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார். இந்த படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து கவனம் ஈர்த்தவர் கீதா கைலாசம்.
சின்னத்திரையில் பல நடிகர்களை அறிமுகப்படுத்திய பால கைலாசத்தின் மனைவியான கீதா கைலாசம் எழுத்தாளராக இருந்த நிலையில், தற்போது சினிமாவில் குணச்சித்திர நடிகையாக மாறியுள்ளார். இவர் இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தரின் மருமகள் ஆவார். வித்தியாசமாக படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒடிடி தளத்தில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் (பசுபதி) மனைவியாக நடித்து அசத்தியவர் கீதா கைலாசம்.
அதனைத் தொடர்ந்து வீட்ல விஷேஷம் படத்தில் செவிலியராக நடித்த இவர் தற்போது மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்துள்ளார். மாமன்னன் என்ற வடிவேலுவின் கேரக்டரை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வடிவேலுவுக்கு இணையாக ஈடுகொடுத்து நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார் கீதா கைலாசம். எதிரிகள் வீட்டை அடித்து நொறுக்கும்போது கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை கண்முன் நிறுத்தியவர். தற்போது இவரது கேரக்டருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil