ஜீ தமிழ் உடனான 4 வருட நட்பு இனிதே முடிவடைந்தது என்று இயக்குனரும் நடிகருமான கரு பழனியப்பன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணயைத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 1999-ம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஹவுஸ்புல் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கரு.பழனியப்பன். தொடர்ந்து துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த அவர், 2003-ம் ஆண்டு வெளியான பார்த்தீபன் கனவு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன்பிறகு சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரபுன்னகை, சதுரங்கம், ஜன்னல் ஓரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரு.பழனியப்பன் தற்போது சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஆண்டவர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்கம் மட்டுமல்லாமல் திரைப்படங்களில் நடித்து வரும் இவர், மந்திரபுன்னகை, நட்பே துணை, கள்ளன், டிபிளாக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியில் இருந்து திடீரென கரு.பழனியப்பன் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், வெளியிட்டுள்ள பதிவில்,
எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள் !!! இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது.. தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட " தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது...! சமூக நீதி , சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! .....
நன்றி @zeetamizh @zee5tamil @sijuprabhakaran @poongundran.ganesan ... உடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் அன்பு! நன்றி ! முத்தங்கள் ! எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் , விரைவில் சந்திப்போம்!! என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜீ தமிழ் நிர்வாகத்தை தொடர்புகொண்டபோது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.