சினிமாவில் சாதி பார்த்துதான் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று வெளியாகியுள்ள தகவலுக்கு இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து தனது ஆதரங்கத்தை வெளிப்படுத்தி சினிமாவில் அவ்வாறு நடப்பதில்லை என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளையும் கூறியுளளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இருக்கும் மாரிமுத்து தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமாக பரியேறும் பெருமாள் படத்தில் ஆதிக்க வர்க்கத்தின் முக்கிய நபராகவும் நாயகியின் அப்பாவாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
தற்போது எதிர்நீச்சல் தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் மாரி முத்து இயக்குனர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கி வரும் வா தமிழா வா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசிய வார்த்தைகள் குறித்து வீடியோ வெளியிடப்பட்டது. ஏற்கனவே மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர்மகன் படம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இது தொடர்பான மாரி செல்வராஜூக்கு ஆதரவும் எதிர்ப்பும் சமளவில் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது மாமன்னன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வழக்கமாக தனது படங்களில் நடக்கும் சாதிய பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து அரசியல் த்ரில்லர் படமாக கொடுத்த மாரி செல்வராஜூக்கு பாராட்டுக்கள் குவித்து வரும் நிலையில் வா தமிழா வா நிகழ்ச்சியில் அவர் பற்றி பேசப்பட்டது.
இதில் நகரத்தில் ஜாதி பார்ப்பதில்லை என்றும், நகரத்தில் சாதி பார்க்கப்படுகிறது என்று இரு தரப்பினரும் விவாதித்துக்கொண்டிருந்தனர். இதில் வடிவேலுவுடன் நடித்து பிரபலமான நடிகர் ஒருவர் சினிமாவில் சாதி பார்க்கப்படுகிறது என்று கூறியதை கேட்ட இயக்குனர் மாரிமுத்து அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதை கேட்ட தொகுப்பாளர் கரு.பழனியப்பன் என்ன நடந்தது என்பதை சொல்ல சொல்கிறார்.
இதற்கு மாரிமுத்து நான் சென்னைக்கு வந்து 35 வருடங்கள் ஆகிறது. எனக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தவர்களும், சினிமா வாய்ப்பு மறுத்தவர்களும் சாதி பார்த்து எதுவும் செய்யவில்லை என்று சொல்ல அப்போது குறுக்கிடும் காமெடி நடிகர், இப்போ 2-3 வருடங்களாக சில இயக்குனர்கள் என் ஊரக்காரனை வைத்து தான் படம் எடுப்பேன். ஏன்னா அவரது சாதிக்காரனை வளர்த்துவிடனும் என்று நினைக்கிறார்கள். இதற்கு மற்றொரு இயக்குனர் துணையாய் இருக்கிறார். அதேபோல் என் சாதிக்காரன் தான் நடிக்கனும் என் சாதிக்காரன் தான் மேல வருணும்னு நினைக்கிற வர்க்கம் இருக்கு. இதனால் இடைப்பட்ட நாங்கள் கஷ்டப்படுகிறோம்
சில இயக்குனர்கள் தங்களின் உதவி இயக்குனராக தன் சாதிக்காரணைத்தான் சேர்த்துக்கொள்ள நினைக்கிறார்கள் என்று சொல்ல, தொகுப்பாளர் கரு.பழனியப்பன் இது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது என்று சொல்கிறார். தொடர்ந்து பேசும் அந்த காமெடி நடிகர், இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை சார் நீங்களும் ஒரு இயக்குனர் என்பதால் இப்படி மறைக்கலாம் என்று சொல்கிறார். இதற்கு கரு.பழனியப்பன் மறுக்கிறார். ஆனாலும் தொடர்ந்து பேசும் காமெடி நடிகர், தனியாக யோசித்து பாருங்கள் உங்களுக்கு புரியும் என்று சொல்கிறார்.
மேலும் நான் சினிமாவுக்கு வந்து 40 வருஷம் ஆகுகு இன்னும் கொஞ்ச நாளில் நான் செத்துப்போயிருவேன். நான் எனது 18 வயதில் நடிச்சு பெரிய ஆளா ஆகிடலாம்னு நெனச்சி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்தேன். ஆனால் அவமானம் தான் மிஞ்சியது. 3 வருஷமா ஷூட்டிங் இல்லாம இருக்கேன். அந்த படத்தில் கூப்பிடுவாங்களா என்று கேட்டால் நீ அந்த சாதி இல்லை அதனால் கூப்பிடமாட்டாங், இந்த படத்தில் கூப்பிடுவாங்களா என்று கேட்டால் நம்ம கலருக்கு கூப்பிட மாட்டாங்க. அந்த ஊர்க்காரர்களை வளர்த்துவிட்டால் தான் தனது சாதி வளரும் என்று பலர் நினைக்கிறார்கள் என்று கூறினார்.
இதனை மறுத்த இயக்குனர் மாரிமுத்து 3 வருஷமா வாய்ப்பு இல்லைனு சொல்றது ரொம்ப ஆச்சரியமாக இருக்கு. எத்தனையோ வடிவேலு படத்தில் ரொம்ப நல்ல கேரக்டர் பண்ணிருக்கீங்க. அதனால எங்கேயோ இருட்டுல அடி வாங்கிருக்கீங்கனு நினைக்கிறேன். நீங்க சொல்ற மாதிரி எங்கேயோ நடக்கும் சார். இங்க எல்லோர் மனதிற்குள்ளேயும் யார் யார் என்ன சாதி என்ற வியூ இருந்துகிட்டு தான் இருக்கு. அத பத்தி நாம ஓப்பனா பேசுறது இல்ல ஆனா இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் எனக்கு அந்த கதாபாத்திரத்தை கொடுத்தது சாதி பார்த்து கொடுக்கல. என் நடிப்பு மீது நம்பிக்கை இருந்ததால் தான் அவர் தந்தாரு. நான் அந்த கதாநாயகி கயல் ஓட அப்பாவா நடிச்சா நல்லா இருக்கணும்னு நினைச்சாரு. அதனால தந்தாரு அவர் ஜாதி பார்த்து தரல
ஒரு துறையை நோக்கி நாம நகரும் போது அங்கே எல்லாரும் உடனே நம்ம தூக்கி வச்சு கொண்டாடிட மாட்டாங்க. இங்க பாரதிராஜாவும், பாக்கியராஜும், பாலச்சந்திரனும் ஆரம்பத்திலேயே யாராலும் தூக்கி வச்சு கொண்டாடப்படவில்லை. ஆரம்பத்தில் அவங்களும் எவ்வளவோ பிரச்சனைகளையும் போராட்டங்களையும் சந்தித்து தான் சினிமாவில் முன்னேறி இருக்காங்க என்று மாரிமுத்து பதில் கொடுத்திருக்கிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.