தமிழ் சினிமாவில் குழந்தைகளை வைத்து திரைப்படங்கள் இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பாண்டிராஜ். 2009- ம் ஆண்டு இவர் இயக்கிய பசங்க திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு, வம்சம், மெரினா, கேடி பில்லா, கில்லாடி ரங்கா, பசங்க 2, இது நம்ம ஆளு, கதக்களி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வந்தார்
கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தை இயக்கியிருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் பெரிய வெற்றியை பெறும் என்று பலரும் நினைத்தனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்த படம் வீழ்ச்சியை சந்தித்தது. அதன்பிறகு படங்கள் இயக்காத பாண்டிராஜ் 3 வருட இடைவெளிக்கு பிறகு, விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் தலைவன் தலைவி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
கடந்த ஜூலை 25-ந் தேதி வெளியான இந்த படம் பெரிய வெற்றியை பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்று வரும் இந்த தலைவன் தலைவி திரைப்படம் 3 ஆண்டுகள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று இயக்குனர் பாண்டிராஜ் கூறியுள்ளார். பிகைண்ட் டாக்கிஸ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த படத்திதை 2 மணி நேரம் 34 நிமிடங்கள் எடுத்தேன். ஆனால் ரசிகர்கள் அவ்வளவு நேரம் தியேட்டரில் இருப்பார்களா என்ற சந்தேகத்தில் 14 நிமிடங்களை குறைத்துவிட்டேன்.
தியேட்டரில் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன், படத்தை ரசித்து பார்ப்பது எனது 3 ஆண்டுகள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. கிராமத்து கதைக்களம், ஃபேமிலி படம் என்றால் வெற்றி பெற்று விடுகிறது என்று சொல்கிறார். இனிமேலும் இதே பாணியில் படம் பண்ணுவேனா அல்லது வேறு ஜானரில் மாறுவேனா என்று தெரியாது. ஆனால் ஹார்ர், ஆக்ஷன் ஆகிய ஜானர்களில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஹாரார் படத்திற்கான கதையும் என்னிடம் இருக்கிறது. எது அமைகிறதோ அதை பண்ணலாம்.
விஷால் நடிப்பில் நான் எடுத்த கதக்களி திரைப்படம் அப்போது சரியாக போகவில்லை. இது நான் எடுத்த படம் தான் என்பதே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இப்போது அந்த படத்தை பற்றி நன்றாக பேசி பாராட்டுகிறார்கள். அந்த படம் வந்தபோது 4 படங்கள் வெளியானது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படமும் அப்போது வெளியாகி இருந்தது. அந்த படத்தில் காமெடி அதிகம் இருந்தது. ரஜினி முருகன் மாதிரி என்னால் பண்ண முடியும் என்பதால் தான் கடைக்குட்டி சிங்கம் எடுத்தேன்.
நாம் ஒரு சமையல்காரன் மாதிரி விதவிதமாக சமைத்து கொடுக்க வேண்டும். ரசிகர்கள் எதை விரும்புகிறார்களே அதை எடுத்துக்கொள்வார்கள் என்று பாண்டிராஜ் கூறியுள்ளார்.