தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்த எஸ்.ஏ. சந்திரசேகர் நேற்று தனது 78-வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் அவரின் மகனும் தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய் கலந்துகொள்ளாத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1978-ம் ஆண்டு அவள் ஒரு பச்சை குழந்தை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஏ.சந்திரசேகர் அதன்பிறகு 1981-ம் ஆண்டு இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படததின் மூலம் கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார். விஜயகாந்த் நடித்த இந்த படம் தமிழில் பெரிய வெற்றிப்படமாக அமைந்து இருவருக்குமே பெரிய அறிமுகத்தை கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த எஸ்.ஏ.சி 1980-90 காலக்கட்டத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். 90-களின் தொடக்கத்தில் தனது மகன் விஜய்யை நாயகனாக வைத்து சில படங்களை இயக்கினார். தற்போது விஜய் கால்ஷீட்காக பல தயாரிப்பு நிறுவனங்கள் காத்துக்கிடக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனிடையே விஜயின் மக்கள் இயக்கம் மூலம் அவருக்கு அரசியல் ஆசையை தூண்டிவிட்டதுடன் அவருக்கு தெரியாமல் அரசியல் கட்சி தொடங்க ஏற்பாடு செய்ததாகவும் எஸ்.ஏ.சி மீது புகார் வந்த நிலையில், விஜய் தனது அப்பா தொடங்கும் கட்சிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று கூறியிருந்தார். இந்த மோதல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை.
இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்காக ஆயத்தமாகி வரும் நிலையில், சமீபத்தில் பள்ளி மாணவர்களை சந்தித்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனிடையே நேற்று (ஜூலை 2) இயக்குனர் எஸ்.ஏ.சி தனது 78-வது பிறந்த நாளை வீட்டில் தனது மனைவி ஷோபாவுடன் எளிமையாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் அவரது மனைவி குழந்தைகள் என யாருமே பங்கேற்கவில்லை.
அதேபோல் கடந்த ஜூன் 22-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய விஜய் அப்போதும் தனது அப்பா எஸ்.ஏ.சி-யை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்னை என்பது தெளிவாக தெரியாத நிலையில், இருவரும் பிரச்னையை மறந்து இணைய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“