பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக இருந்ததாக நடிகையும் பிரபல டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்றுத்திரைப்படமாக பொன்னியின் செல்வன் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா ஐஸ்வர்யா ராய் பச்சன், சரத்குமார் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் நந்தினியாக நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிப்புக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், அவரின் தமிழ் உச்சரிப்பு தன்னை மெய்சிலிர்க்க வைத்துள்ளதாக பொன்னியின் செல்வன் படத்தில் அவருக்கு குரல் கொடுத்த நடிகை தீபா வெங்கட் பாராட்டியுள்ளார்.
1994-ம் ஆண்டு பாசமலர்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தீபா வெங்கட், தொடர்ந்து, தில், பாபா, மலைக்கோட்டை, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள இவர், 2000-ம் ஆண்டு வெளியான அப்பு படத்தில் தேவயானி தொடங்கி தற்போது பொன்னியின் செல்வன் ஐஸ்வர்யா ராய் வரை தமிழில் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.
இதனிடையே தற்போது பொன்னியின் செல்வன் ஐஸ்வர்யா ராய் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர்,
தற்செயலாக அல்லது அதிர்ஷ்டத்தால் அவர்கள் இருக்கும் இடத்தில் யாரும் இல்லை. பல ஆண்டுகளாக பொறுமை, விடாமுயற்சி, கடின உழைப்பு, புத்திசாலித்தனம், பேரார்வம் போன்ற பல குணங்கள் உங்கள் திறமைகளை அர்ப்பணிப்புடனும் சிறந்து விளங்க வேண்டும்.
ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு குரல் கொடுத்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவரின் சரியான தமிழ் உச்சரிப்பை கேட்டு மெய்சிலிர்த்தேன். அன்றாடத் தமிழ் பேசும் நம்மில் பெரும்பாலோருக்கு, கற்புடைய தமிழில் எளிய வாக்கியங்கள் கூட சவாலாக இருக்கும். மேலும் இதுபோன்ற வரிகளை பதிவு செய்யும் போது, டிக்ஷன், எக்ஸ்பிரஷன், டெலிவரி என அனைத்திற்கும் ஸ்பாட் இருக்க, நேரம் எடுக்கும் ஆனால் ஐஸ்வர்யா ஆச்சரியப்படுத்தும் வகையில் சிறப்பாக பேசி அசத்திவிட்டார்.
அடுத்த ஆச்சரியம்
ஷுட்டிங் எடுக்கும்போது வசனம் பேசுவதில் அவருக்கு உதவியாக யாரும் இல்லை. உதவிக்கு அவர் யாரையும் கேட்கவில்லை. அவரே அனைத்தையும் கவனித்துக்கொண்டார். நிறைய நேரம் எடுத்துக்கொண்டு, ஒரு நல்ல மாணவியாக தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.
"டப்பிங் ல பாத்துக்கலாம்" என்பது படப்பிடிப்பின் போது பல இடங்களில் வரும் பொதுவான வார்த்தையாக இருக்கிறது. உங்கள் வசனங்களை வேறு யாரோ பேசுகிறார்கள் என்று நன்றாகத் தெரிந்தும் வசன உச்சரிப்பை பற்றி கவலைப்படாமல் இருப்பார்கள். ஆனால் இவர் அப்படி இல்லை. எவ்வளவு உயரம் சென்றாலும் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு அவரைப் போன்ற கலைஞர்கள்தான் வழி காட்டுகிறார்கள்.
வசன உச்சரிப்பபில் அவரின் சமநிலை, தொனி மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றை முயற்சி செய்து சரியாக பேசியது முற்றிலும் அற்புதமாக இருந்தது. டப்பிங்கின்போது எனது கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்த இயக்குனர் தனசேகர் மற்றும் மணி சார் குழுவினர், சவுண்ட் இன்ஜினியர் முத்து அவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.