சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் சம்பளம் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இணையதளங்களில் வளர்ச்சி அதிகரித்துள்ள இன்றைய காலக்கட்டத்தில் எப்படிப்பட்ட சுவாரஸ்யமான கதைகளை கொண்ட திரைப்படங்களை கொடுத்தாலும், பழையதை மறக்க கூடாது என்பதை போல் குடும்ப உறவுகளை மையப்படுத்தி வெளியாகி வரும் சின்னத்திரை சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டிவி சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகளை திட்டிக்கொண்டிருந்த காலம் போய் தற்போது ஆண்கள் மற்றும் இளைஞர்கள் என பல தரப்பினரும் ரசிகர்களாக மாற்றியுள்ள பெருமை சீரியலுக்கு உண்டு.
இதன் காரணமாக முன்பு வாரத்தில் 5 நாட்கள் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் தற்போது 6-நாட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்து வாரத்தில் 7 நாட்களும் ஒளிபரப்பானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சொல்லும் அளவுக்கு நாளுக்கு நாள் சீரியல்களுக்கு உண்டான மதிப்பும், அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு உண்டான ரசிகர்களிடம் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குடும்ப கதைகள் இன்று சமூகத்தில் ட்ரெண்டிங்காக இருக்கும் விஷயங்களை புகுத்தி திரைக்கதை அமைக்கப்படுவதால் சீரியல்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
அந்த வகையில் சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இதுவரை எந்த சீரியலும் பெறாத டிஆர்பி ரேட்டிங் புள்ளிகள் பெற்றுள்ள எதிர்நீச்சல் சீரியல் இந்த அளவிற்கு வரவேற்பை பெறுவதற்க்கு காரணம் சீரியலின் கதையும், இதில் வில்லன் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்துவும் தான். சமீப காலமாக இணையதளங்களை பார்த்தாலே எதிர்நீச்சல் மயமாகத்தான் உள்ளது. கோலங்கள் என்ற பெரிய ஹிட் சீரியலை கொடுத்த திருச்செல்வம் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார்.
இதில் பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, விபு ராமன், கமலேஷ், சபரி பிரசாந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து வருகிறது. இதனிடையே தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி எதிர்நீச்சல் சீரியலில் வில்லத்தனத்தில் மிரட்டி வரும் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வரும் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்துவுக்கு ஹீரோவாக நடிக்கும் சபரியை விட இரு மடங்கு சம்பளம் அதிகமாக கொடுக்கப்படுகிறது. மாரிமுத்துக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.
அடுத்து படியாக மதுமிதா, கமலேஷ், ஹரிப்பிரியா ஆகியோருக்கு தலா ரூ.15 ஆயிரமும், சக்தி, கனிகா ஆகியோருக்கு ரூ.12 ஆயிரமும், சபரி, பிரியதர்ஷினி ஆகியோருக்கு ரூ.10 ஆயிரமும் ஒரு நாள் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஹீரோவாக நடித்து வரும் சபரியை விட மாரிமுத்து அதிக சம்பளம் வாங்க வொர்த்தான ஆள்தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“