எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் வேடத்தில் நடித்து வரும் ஆர்.ஜே.நெலு தனது சொந்த ஊரான இலங்கை சென்றபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது
சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பெண்கள் குழந்தைகள் பெரியர்கள் என அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு சீரியலாக உள்ளது. இதில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து சீரியலுக்கும் தனக்கும் பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக்கொண்ட நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து சமீபத்தில் மரணமடைந்த நிலையில், அவருக்கு பதிலாக வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக நடித்து வருகிறார்.
பெண்கள் முன்னேற்றம், பெண்கள் அடிமைத்தனம், ஆணாதிக்கம் உள்ளிட்டஇன்றைய சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலை கோலங்கள் சீரியலை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். அதே சமயம் மாரிமுத்து இல்லாத எதிர்நீச்சல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சற்று சறுக்கலை சந்தித்தாலும், தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது.
இந்த சீரியலில் முக்கிய கேரக்டரான ஜனனியின் சித்தப்பா மகனாக கிருஷ்ணசாமி மெய்யப்பன் என்ற வில்லன் ரோலில் சமீபத்தில் களமிறங்கியவர் ஆர்.ஜே.நெலு. 2 நாட்கள் மட்டுமே நடித்திருந்தாலும், இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இலங்கையின் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த இவர், தொகுப்பாளராக இருந்து வரும் நிலையில், இயக்குனராக பல குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.
இலங்கையில் நடிகராக வேண்டும் என்று முயற்சித்த இவர் மீசையை முறுக்கு என்ற படத்தை பார்த்து தமிழகத்திற்கு வந்துள்ளார், அதன்பிறகு பல போராட்டங்களுக்கு பிறகு ஆர்.ஜே.வான இவர், அடுத்து திருச்செல்வம் இயக்கி வரும் எதிர்நீச்சல் தொடரில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார். இவரை பார்த்த இயக்குனர் திருச்செல்வம், முக்கிய வில்லன் ரோலை இவருக்கு கொடுத்து சீரியலின் கதை பற்றி எடுத்து கூறியுள்ளார். தொடக்கத்தில் 2 நாட்கள் மட்டும் நடித்திருந்த நெலு தற்போது மீண்டும் எதிர்நீச்சல் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.
இதனிடையே தற்போது தனது சொந்த ஊரான மட்டக்களப்புக்கு சென்ற ஆர்.ஜே.நெலுவிற்கு சொந்த ஊரை சேர்ந்த பலரும் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நெலு, உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“