கோவையில் திரை உலகினர் பங்கேற்ற மறக்க முடியுமா கலைஞரை? என்ற நிகழ்ச்சியில் மறைந்த கருணாநிதி பற்றி திரையுலகினர் பலரும் புகழ்ந்து பேசினர்.
மறக்க முடியுமா கலைஞரை? நிகழ்ச்சி:
மறைந்த கருணாநிதியின் புகழை போற்றும் வகையில், தமிழ் திரை உலகினர் கோவையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், பிரபு, பிரகாஷ்ராஜ், ராதிகா உட்பட பலரும் கலந்துக்கொண்டு கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர். அவற்றின் தொகுப்பு இதோ:
நடிகை ராதிகா பேச்சு:
முதல் முறையாக கலைஞர் இல்லாத திமுக மேடையில் நிற்கின்றேன்.கலைஞருடன் கலையுலக பயணத்தை விட அரசியல் பயணம் தான் அதிகம். தமிழ் உணர்வை எனக்குள் கொண்டு வந்தவர் கலைஞர். மேடையில் பேசுவது எப்படி என்பது முதல் அவரிடம் கற்றுக்கொண்டது ஏராளம்.
அனைவரையும் அரவணைத்து செல்வது தான் திமுக-வின் பலமாக இருக்கிறது. நடிக்க விருப்பம் இல்லாத என்னை இயக்குனர் பாரதிராஜா சாக்லேட் கொடுத்து நடிக்க வைத்தார். கலைஞரின் வசனத்தை மிக சிரமப்பட்டு தான் சினிமாவில் பேசினேன். எனக்கு கடினமாக இருந்தால் அந்த வசனத்தை மாற்றிக்கொள்ளுமாறு வசன பேப்பர் கீழே எழுதியிருந்தார்.
ஆனால் அந்த வசனத்தை நான் நம்பிக்கையோடு பேசி முடித்தேன். அதெல்லாம் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பாடம் மற்றும் வரம்.
நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு:
தென்னிந்திய சினிமாவின் தலைநகரமாக சென்னை இருந்தது. சினிமா மட்டுமல்லாமல் அரசியலுக்கும் தலைநகரம் சென்னைதான். இப்போது தலைநகரம் இருக்கிறது. ஆனால் தலைவர் இல்லை. ஒரு நடிகனாக திராவிட திருநாடின் கலைஞனாக இருவர் படம் எனக்கு அங்கீகரம் கொடுத்தது. அது மட்டுமல்ல இன்று வரை அடையாளமாகவும் இருக்கிறது.
காந்தி என்றால் அகிம்சை என்பது போல கலைஞர் என்றால் சமூக நீதிதான் நினைவுக்கு வரும். அவர் கொண்டு வந்த அத்தனை சமூக நீதித் திட்டங்களையும் அனைத்து மாநிலங்களிலும் அமலாக்கப்பட்டுள்ளன. நுழைவுத் தேர்வு என்ற நவீன தீண்டாமையை எதிர்த்துப் போராடியவர். அதை ரத்து செய்தவர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டம் எத்தனை பெண்களை தலை நிமிர வைத்தது என்பதை பெண்கள் உணர்வார்கள்.
நடிகர் பிரபு:
நான் சினிமாவில் அறிமுகமாக உள்ளேன் என்றதும், தந்தை சிவாஜி கணேசன் தன்னை அழைத்து முதலில் கோபால புறம் போய் பெரியவரை சந்தித்து, அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிட்டு வா என்றார்.
இதனால் கலைஞர் அவரை சந்திக்க சென்றதும், அவர் தன்னை உள்ளே அழைத்து நீ நடிக்க உள்ளது தமிழ் படமா..? அல்லது இங்கிலீஷ் படமா..? என கேட்டு… தமிழ் படம் தான் என கூறியதும் மிகவும் சந்தோஷமாக ஆசீர்வாதம் வங்கி வந்தேன். தனது நண்பனின் மகனாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களை சரிசமமாக பார்ப்பவர் கருணாநிதி. தனது நண்பர் சிவாஜி கணேசனின் சிலையை சொன்ன இடத்தில் வைக்க முடியவில்லை என்று அவர் எப்படி தவித்தார் என்பது எங்களுக்கு தெரியும். அதற்கு பிறகு அவர் சொன்ன மாதிரியே சொன்ன இடத்தில் வைத்தார்.
ஆனால் சில சச்சரவுகள் வந்ததால் அதை எடுத்து வேறு இடத்தில் வைத்து விட்டார்கள். அந்த சிலையை மீண்டும் அந்த இடத்தில் மு.க.ஸ்டாலின் வைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
நடிகர் சத்யராஜ்:
மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை தானே அழைத்துக் கொண்டவர் கருணாநிதி. அங்கு தான் அவர் தன்னை பெரியாறு தொண்டன் என்று நிரூபித்துக் கொண்டார். தலைவர் கலைஞர் தமிழ்நாட்டுக்கு மட்டும் முதலமைச்சர் கிடையாது. முதலமைச்சருக்கு எல்லாம் முதலமைச்சர். ஏனென்றால் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர் கருணாநிதி.
கலைஞர் கருணாநிதி என்பது வெறும் உயிர், சதை, இரத்தம் இருக்கும் மனிதன் அல்ல. அவர் ஒரு தத்துவம். தத்துவம் ஒருபோதும் அழிவதில்லை
இவ்வாறு சிறப்பாக நடந்த மறக்க முடியுமா கலைஞரை? நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்துக்கொண்டு கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர்.