Tamil Film Director’s Union election 2022 Tamil News: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் சென்னை கே.கே.நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைமையிலான அணி அமோக வெற்றி பெற்றது. திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி 955 வாக்குகளைப் பெற்று இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் உள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் தற்போது முடிவடைவந்துள்ள நிலையில், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. முன்னதாக இத்தேர்தலில், இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியும், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையிலான ஒரு அணியும் களமிறங்கும் என தெரிவிக்கப்பட்டது.
கே.பாக்யராஜ் அணியில் அவரே தலைவராக போட்டியிட்டார். ஆர்.மாதேஷ், எஸ். எழில் ஆகிய இருவரும் துணைத்தலைவர்கள் பதவிக்கும், ஆர்.பார்த்திபன் செயலாளர் பதவிக்கும், வெங்கட்பிரபு பொருளாளர் பதவிக்கும் போட்டியிட்டனர். இந்த அணியில் இணைச்செயலாளர்கள் பதவிக்கு ராஜா கார்த்திக், விருமாண்டி, ஜெகதீசன், ஜெனிபர் ஜூலியட் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஆர்.பாண்டியராஜன், மங்கை அரிராஜன், வேல்முருகன், சசி, பாலசேகர், வி.பிரபாகர், சாய்ரமணி, நவீன், சிபி, நாகேந்திரன், ஜெகன் ஆகியோர்களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் போட்டியிட்டனர்.
இதேபோல் ஆர்.கே.செல்வமணி தலைவராக போட்டியிட்ட அணியில், செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளர்களாக சுந்தர்.சி, முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், மனோ பாலா, சரண், திருமலை, ஏ.வெங்கடேஷ், ரவிமரியா, ஆர்.கண்ணன், முத்து வடுகு, நம்பி, ரமேஷ் பிரபாகர், கிளாரா உள்ளிட்ட 19 பேர் போட்டியிட்டனர்.
நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு இயக்குநர் சங்க தேர்தலில் மொத்தம் 1525 வாக்குகள் பதிவாகின. இதில் 955 வாக்குகளை பெற்ற செல்வமணி 566 வாக்குகள் பெற்ற பாக்யராஜ் 389 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் ஆர்.கே.செல்வமணி தமிழ்நாடு இயக்குநர் சங்க தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவர் ஏற்கனவே FEFSI (தென்னிந்திய திரைப்பட பணியாளர்கள் கூட்டமைப்பு) தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
தமிழ்நாடு இயக்குநர் சங்க தேர்தல் முடிவுகள்
— Ramanujam.K | இராமானுஜம்.கி (@ramnellai) February 27, 2022
மொத்தம் பதிவான வாக்குகள் – 1525
செல்வமணி பெற்ற வாக்குகள் – 955
பாக்யராஜ் – 566
389 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர் கே செல்வமணி வெற்றி!!!#DirectorsUnion
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“