தமிழகத்தில் தியேட்டகளில் தற்போது உள்ள கட்டணங்களை மாற்றியடைக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிங்கிள் ஸ்கிரீன், மல்டி பிளக்ஸ் என சுமார் 800-க்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. இந்த திரையரங்குகளில், ஏற்படும் தொடர்ச்சியான நிதி இழப்புகள் குறித்து சங்கத்தின் பல புகார்களுக்குப் பிறகு இந்த கட்டண உயர்வு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர், மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கட்டண உயர்வு கோரிக்கை தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சங்கத்தின் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட ஆவணத்தில், மல்டிபிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட் விலையை ரூ.250 ஆக உயர்த்த வேண்டும் என்று திரைப்பட அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ஏசி இல்லாத தியேட்டர்களில் டிக்கெட்டை ரூ.150 ஆக உயர்த்தவும் ஐமேக்ஸில் டிக்கெட் விலையை ரூ.450 ஆக உயர்த்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணத்தை உயர்த்தினால் திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை மேலும் பாதிக்கப்படும் என பலர் கருதுகின்றனர். அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளில் திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது,
இதன் காரணமாக டிக்கெட் விலையை உயர்த்தினால் மேலும் மக்களின் வரத்து பாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. கடைசியாக 2017-ம் ஆண்டு திரையரங்கு டிக்கெட் விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதில் மூன்று திரைகளுக்கு மேல் உள்ள மல்டிபிளக்ஸ்களில் டிக்கெட்டின் அடிப்படை விலை ரூ.150 ஆகவும், மூன்று திரைகளுக்கு குறைவாக உள்ள மல்டிபிளக்ஸ்களில் ரூ.108 முதல் ரூ.118 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“