தொடக்கத்தில் இருந்தே வேட்டி சட்டை, சேலையில் பார்த்து பழகிய பிரபல நாட்டுப்புற பாடகர்கள் தம்பதியான புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி இருவரும் மாடர்ன் உடையில் வெளிநாட்டில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் நாட்டுப்புற பாடல் என்றால் உடனடியாக நினைவுக்கு வரும் ஒரு சிலரில் முக்கியமானவர் புஷ்பவனம் குப்புசாமி. ஒரு சில திரைப்படங்கள் நடித்துள்ள இவர், சேரனின் சொல்ல மறந்த கதை படத்தில் காமெடி நடிகராக நடித்திருந்தார். இவரது மனைவி அனிதா குப்புசாமி. நாட்டுப்புற பாடகியான இவரும் தனது கணவருடன் இணைந்து பல பாடல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் பாடியுள்ளார்.
தற்போது பாடல் பாடுவதில் மட்டுமல்லாமல் வீட்டில் மாடித்தோட்டம் எப்படி அமைக்க வேண்டும், அவற்றை எப்படி பராமரிக்க வேண்டும் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் தங்களது வீட்டில் மாடித்தோட்டம் வளர்த்து அது தொடர்பான வீடியோக்களை தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகின்றனர் அதேபோல் ஆன்மீகம் தொடர்பான தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை பல்கலைகழகத்தில் தன்னுடன் படித்த புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பல பாடல்கள் பாடியுள்ள அனிதா அவருடன் நட்பாக பழகி பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பல்லவி என்ற ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி இருவருமே பிரபலங்களாக இருந்தாலும் வெளியில் எங்கு சென்றாலும் தங்களது பாரம்பரிய உடையில் தான் சென்று வந்துள்ளனர்.
தமிழக மக்கள் ரசிகர்கள் என பலருக்கும் அவர்கள், இப்படித்தான் இருப்பார்கள் என்பது தெரிந்த ஒன்று. தற்போது இருவருமே அந்த நிலையை மாற்றியுள்ளனர். துபாய் பாலைவனத்தில் இருந்து தற்போது அனிதா குப்புசாமி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில், இருவருமே கருப்பு டைட் பேன்ட்- ஷர்ட், கூலிங் கிளாஸ் அணிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“