பாபு
போக்கிரி, விக்ரமார்க்குடு படங்களைத் தொடர்ந்து டெம்பர் படமும் தமிழ், இந்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரீமேக் செய்யப்படுகிறது. டெம்பரில் அப்படி என்ன ஸ்பெஷல் என்பதை பார்க்கும்முன் போக்கிரி, விக்ரமார்க்குடு குறித்து சின்ன விளக்கம்.
போக்கிரி மகேஷ்பாபு நடித்த தெலுங்குப் படம். அதனை விஜய் நடிப்பில் பிரபுதேவா அதே போக்கிரி பெயரில் இயக்கினார். விஜய்யின் சுமார் வெற்றிகளுக்கு மத்தியில் சூப்பர் வெற்றியாக போக்கிரி ஜொலித்தது. அந்த போக்கிரியை இந்தியில் சல்மான் கான் நடிப்பில் வான்டட் என்ற பெயரில் இயக்கினார் பிரபுதேவா. படம் சூப்பர் ஹிட். சல்மான் கானின் துவண்டுபோன மார்க்கெட்டை வான்டட் சரி செய்தது.
விக்ரமார்க்குடு ராஜமௌலி இயக்கத்தில் ரவி தேஜா நடித்த தெலுங்குப் படம். அதனை கார்த்தி நடிப்பில் சிறுத்தை என்ற பெயரில் இயக்கினார் சிவா. படம் ஹிட். அதேபடத்தை ரவுடிரத்தோர் என்ற பெயரில் அக்ஷ்குமாரை வைத்து இந்தியில் இயக்கினார் பிரபுதேவா. அதுவரையான அக்ஷய்குமார் படங்களின் வசூல் சாதனைகளை ரவுடிரத்தோர் தகர்த்தது.
இவ்விரு படங்களின் சரித்திரத்திலிருந்து டெம்பரின் மீதான எதிர்பார்ப்பு எத்தகையது என்பது புரிந்திருக்கும். இனி டெம்பர்.
2015 இல் புரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான படம், டெம்பர். படம் ஹிட். ஆனால், சூப்பர் ஹிட்டெல்லாம் இல்லை. எனில், ஏன் அதற்கு மேல் இத்தனை மோகம்? காரணம் படத்தில் இடம் பெற்றிருந்த ஹீரோயிசம். காக்கி சட்டை போட்டால் யாரை வேண்டுமானாலும் உதைக்கலாம். யாரிடமிருந்தும் பணம் வாங்கலாம் என்று சின்ன வயதில் அறிந்துகொள்ளும் ஹீரோ வளர்ந்ததும் போலீசாகிறான். கிடைக்கிற வழிகளில் எல்லாம் பணம் சம்பாதிக்கிறான். தாதா பிரகாஷ்ராஜின் அடியாளாகவே மாறுகிறான். இந்த நிலையில், பிரகாஷ்ராஜின் ஆள்கள் ஒரு பெண்ணை கற்பழிக்க, தனது காதலி காஜல் அகர்வாலின் நிர்ப்பந்தத்தால் அந்த வழக்கிற்கு பின்னால் போகிறான். பிரகாஷ்ராஜை பகைத்துக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க போராடுகிறான்.
எளிமையான கதை. படத்தின் மையம் கரம் மசாலா போலிருக்கும் ஹீரோ கதாபாத்திரம். அடியில் பற்ற வைத்த ராக்கெட் போல எப்போதும் ஒரு கோபம், பதட்டம். கலர் சட்டை, ஜீன்ஸ் அணிந்து இடுப்பில் கௌபாய் போல துப்பாக்கியை தொங்கப்போட்டிருக்கும் ஜுனியர் என்டிஆரின் ஸ்டைலில் எந்த ஹீரோவும் விழுந்துபோவார்கள். லாஜிக் தூசி அளவுக்குக்கூட படத்தில் இல்லை. ஆனால், ஹீரோயிசம் தூள் கிளப்பும்.
டெம்பரை கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷன்ஸ் இந்தியில் தயாரிக்கிறது. ரன்வீர் சிங் நாயகன். படத்துக்கு சிம்பா என்று பெயர் வைத்து ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்கள். படத்தை இயக்குகிறவர் ஹரியின் சிங்கத்தை இந்தியில் ரீமேக் செய்த ரோஹித் ஷெட்டி. சிங்கத்தை சிங்கம் என்ற பெயரிலேயே இந்தியில் ரோஹித் ஷெட்டி ரீமேக் செய்தார். படம் ஹிட். அதனால் சிங்கத்தை நினைவுப்படுத்துவது போல் சிம்பா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
டெம்பரின் தமிழ் ரீமேக் உரிமையை விஷால் வாங்கியிருக்கிறார். அவரே நடிக்கிறார். இயக்குநர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், இரும்புத்திரையை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்க அதிக வாய்ப்புள்ளது.
போக்கிரி, விக்ரமார்க்குடுவுடன் ஒப்பிடுகையில் டெம்பர் மிக எளிமையான கதை, ட்விஸ்ட்கள் எதுவுமில்லை, லாஜிக் சுத்தமாயில்லை. இத்தனை இல்லைகளை கொண்ட படம் தமிழ், இந்தி பார்வையாளர்களை கவருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.