தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். மற்ற சேனல்களுக்கு போட்டியாக சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னுரிமை அளித்து வரும் ஜீ தமிழில், பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் அவ்வப்போது புதிய சீரியல்களும், அரங்கேறி வரும் நிலையில், பழைய சீரியல்கள் முடிவுக்கும் வந்துகொண்டிருக்கிறது. அதேபோல் அவ்வப்போது கேரக்டர்கள் மாற்றமும் நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இதயம் சீரியலில் கேரக்டர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில், ரிச்சர்ட், ஜனனி அசோக் குமார் ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வந்தனர். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வந்த இந்த சீரியல், சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில் சீரியலின் இரண்டாவது பாகம் வரும் மார்ச் 24-ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
கணவரை இழந்து தனது குழந்தையுடன் வசித்து வரும் பாரதி, ஆதியை திருமணம் செய்துகொண்ட நிலையில், ஆதிக்கு பொருத்தப்பட்டுள்ள இதயம், தனது கணவரின் இதயம் தான் என்று பாரதிக்கு தெரியவந்தால் அடுத்து என்ன நடக்கும், அதேபோல் ஒரு குழந்தையுடன் இருக்கும் பெண்னை திருமணம் செய்துகொண்டதால், ஆதி வீட்டில் இருப்பவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை எப்படி முறியடிக்கிறார்கள் என்பது குறித்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
முதல் சீசனில், ரிச்சர்ட் – பாரதி ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், அடுத்து தொடங்க உள்ள 2-வது சீசனில், பாரதியாக ஜனனி அசோக் குமார் தொடரப்போவதில்லை என்பதை அவரே அறிவித்துள்ளார். தனது அடுத்தகட்ட பயணத்திற்காக இதயம் சீரியலில் இருந்து வெளியேறுவதாகவும் தன்னை பாரதியாக ஏற்று கொண்டவர்களுக்கும் தனக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த சேனலுக்கும் அவர் நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில், வைரலாகி வரும் நிலையில், அடுத்து இதயம் சீரியலில் பாரதியாக நடிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது தெலுங்கு சின்னத்திரையில், பிரபல சீரியல் ஒன்றில் ரிச்சர்ட்டுடன் இணைந்து நடித்துள்ள பல்லவி கௌடா என்ற நடிகை இதயம் சீரியலில் மீண்டும் ரிச்சர்ட்டுடன் ஜோடி சேர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.