மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC), "தி வாய்ஸ் பாக்ஸ்" எனப்படும் குரல்வழி கலைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்க நெட்ஃபிக்ஸ் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இந்திய சினிமாவை மேம்படுத்துவதற்கும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் திறமைகளை வளர்ப்பதற்கான முயற்சியின் பின்னணியில் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC) மற்றும் நெட்ஃபிக்ஸ் (Netflix) இந்தியா இணைந்து செயல்பட உள்ளது. இந்த திட்டத்தில் குரல்வழி கலைஞர்களுக்கு ஆங்கிலம், இந்தி, மராத்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் குஜராத்தி மொழிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
"தி வாய்ஸ் பாக்ஸ்" திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பயிற்சி பெற்றவர்களின் மதிப்பீட்டைத் தொடர்ந்து, புகழ்பெற்ற நபர்களின் விரிவான உரைகள் மற்றும் வழிகாட்டுதல் அடங்கிய பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், சென்னை மற்றும் கொச்சி ஆகிய 7 முக்கிய நகரங்களில் இத்திட்டத்தின் பயிற்சி நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும் 30 பேர் வீதம் மொத்தம் 210 பேர் முதற்கட்டத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 50 சதவீதம் பேர் பெண்களாக இருப்பார்கள்.நெட்ஃபிக்ஸ்-ன் சிறப்பு நிகழ்ச்சியான "ஆசாதி கி அம்ரித் கஹானியா"வின் ஒரு பகுதியாக இருக்க ஒவ்வொரு பேட்சிலிருந்தும் 7 சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை இந்திய சுதந்திரப் போராட்டக் கதைகளைச் சொல்வார்கள்.
ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள வல்லுநர்கள், குறிப்பாக பெண்கள், வாய்ஸ் ஓவரில் தங்கள் திறனை மேம்படுத்த ஆர்வமுள்ளவர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். "தி வாய்ஸ் பாக்ஸ்" நிகழ்வு, கிரியேட்டர்ஸ் ஈக்விட்டிக்காக நெட்ஃபிக்ஸ் நிதியுதவி செய்கிறது. இது படைப்பாற்றல் ஈக்விட்டியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளவில் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறைகளில் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட குழுக்களை அடையாளம் காண நெட்ஃபிக்ஸ் ஐந்து ஆண்டுகளில் $100 மில்லியன் ஒதுக்கியுள்ளது. மேலும் தகவலுக்கு மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC) இணையதளம் மற்றும் சமூகவலைதளங்களை பார்வையிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“